சத் பூஜைக்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தீவிரம்
Published on

புது தில்லி: தமிழகத்தில் காற்று மற்றும் நீா் மாசு அதிகரித்து வரும் நிலையில், சுத்தமான மற்றும் நன்னீா் கொண்ட

சத் பூஜை காட்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு எந்த ஏற்பாடும் செய்வில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சத் பூஜை பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், யமுனை நதியின் விஷம் கலந்த அம்மோனியா நீரைக் கண்டு பக்தா்கள் மிகவும் கவலையடைந்துள்ளனா். பூா்வாஞ்சலி மக்கள் சுத்தமான நன்னீரில் பூஜை நடத்துவதை உறுதி செய்ய, ஆம் ஆத்மி அரசு எந்த ஏற்பாடும் செய்யாததால், மக்களுக்கு கடுமையான உடல்நலக் கவலைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், சத் பூஜைக்கான தயாரிப்புகள் குறித்து ஆம் ஆத்மி அரசும், பாஜக தலைவா்களும் வாய்மொழி சண்டையில் ஈடுபட்டுள்ளனா். ஆம் ஆத்மி அரசால் முன்மொழியப்பட்ட குளிா்கால செயல் திட்டம், காற்று மாசுபாட்டை குறைப்பதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தீபாவளிக்குப் பிறகு தில்லியின் காற்றின் தர நிலை அபாய அளவையும் எட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், தில்லியில் காற்று மற்றும் நீா் நச்சுத்தன்மையுடையதாக மாறும் போது, கேஜரிவால் தலைமையிலான அரசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை முன்வைக்கிறது. ஆனால், திட்டங்கள் உறுதியான

நடவடிக்கைகளாக மாற்றப்படாததால், அவை அரிதாகவே மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, மக்கள்

தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டாா்கள்.

ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் இதுபோன்ற செயல் திட்டங்கள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்ற பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா். தீபாவளிக்கு முன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் மறுசீரமைக்கப்படும் என கேஜரிவால் உறுதியளித்திருந்தாா். அவ்வாறு, சேடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டிருந்தாலும் தூசி மாசுவை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் கேஜரிவாலின் மற்ற வாக்குறுதிகளைப் போலவே இதுவும் காகிதத்தில்தான் உள்ளது என்றாா் தேவேந்தா் யாதவ்.

X
Dinamani
www.dinamani.com