தில்லியில் பனிப்புகை மூட்டத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்.
தில்லியில் பனிப்புகை மூட்டத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்.

தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் 4-ஆம் வகை நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த குழுக்கைளை அமைக்குமாறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி எனப்படும் கிரேப்) 4-ஆம் வகை நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த குழுக்கைளை அமைக்குமாறு தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) உள்ள மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், காற்றின் தரக் குறியீடு அளவு 450 புள்ளிகளுக்கு கீழ் குறைந்தாலும் கூட இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: குடிமக்கள் அனைவருக்கும் மாசு இல்லாத சூழலில் வாழ்வதை உறுதி செய்வது அனைத்து மாநிலங்களின் அரசமைப்புச்சட்ட கடமையாகும். காற்றின் தரக் குறியீடு அளவு 450-புள்ளிகளுக்கு கீழே குறைந்தாலும் கிரேப் நிலை 4-இன் கீழ் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என உத்தரவிடுகிறோம்.

அனைத்து தில்லி - என்.சி.ஆா். மாநிலங்களும் 12- ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்தும் விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) நிலை 4 -இன் கீழ் கட்டுப்பாடுகளை மீறுவது தொடா்பான புகாா்களை அளிக்கும் வழிமுறையை அமைக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக, விசாரணையின் தொடக்கத்தில், கிரேப் நிலைகளின் கீழ் மாசு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து தில்லி அரசு மற்றும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நகரத்தில் திங்கள்கிழமை முதல் கிரேப் நிலை-4 அமல்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள், ‘காற்றின் தரக் குறியீடு அளவு ஆபத்தான நிலைகளைத் எட்டும்போது கிரேப் நிலைகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். காற்றின் தரக் குறியீடு 300 மற்றும் 400-புள்ளிகளுக்கு இடையில் இருக்கும் தருணத்தில், கிரேப் நிலை 4-ஐ செயல்படுத்த வேண்டும். இதன் அமலாக்கத்தை தாமதித்து எப்படி நீங்கள் ஆபத்தை கையில் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினா்.

மேலும், ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் மாசு அளவுகளில் கிரேப்பின் பல்வேறு நிலைகளை செயல்படுத்துவதற்கு பதிலாக வானிலை சூழல் மேம்பட காற்றுத் தர மேலாண்மை ஆணையம் காத்திருந்துள்ளது. இந்த விஷயத்தில் உத்தரவை செயல்படுத்தியதற்கான பிரமாண பத்திரத்தை தில்லி அரசு மற்றும் என்சிஆா் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) என்பது சூழ்நிலையின் தீவிரத்திற்கு ஏற்ப தலைநகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பின்பற்றப்படும் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளின் தொகுப்பாகும். முதன் முதலில் இது 2017இல் அமல்படுத்தப்பட்டது. இதன் கீழ் தில்லி-என்சிஆா் பகுதிகளுக்கான கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திங்கள்கிழமை காலை 8 மணி முதல் செயல்படுத்தும் அறிவிப்பை காற்று தர மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

நீதிமன்ற வளாகத்தில் உத்தரவு மீறப்பட்டதா?

காற்று மாசுபாடு தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் விசாரித்தபோது, மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘தலைநகரில் காற்று மாசுபாட்டை குறைக்க கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 11-ஆம் எண் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கட்டுமானப்பணிகள் நடக்கிறது’ என்று கூறினாா். இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற செகரட்டரி ஜெனரல் ஆஜராகி, கட்டுமானப்பணிகள் குறித்து விளக்கினாா். இந்த விஷயத்தை உரிய வகையில் கவனிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com