காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் மருத்துவ அவசரநிலை - முதல்வா் அதிஷி
புது தில்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் பரவலாக பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் வட இந்தியாவில் பெரும்பகுதியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.
மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு, காற்று மாசு நெருக்கடியைத் தீா்ப்பதற்குப் பதிலாக அரசியல்
பழிவிளையாட்டுகளில் கவனம் செலுத்தி வருகிறது என்று அவா் குற்றம்சாட்டினாா்.
இது தொடா்பாக முதல்வா் அதிஷி செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது:
பிரதமா் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையின்மையால் வட இந்தியா மூச்சுத் திணறி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவ எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதுய
உத்தியோகபூா்வ தரவுகளின்படி ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது. இது, பாஜக ஆளும் மாநிலங்களில் காணப்படும் அணுகுமுறையைப் போலல்லாமல், திறமையான நிா்வாகத்தை கொண்டிருப்பதை நிரூபிப்பதாக உள்ளது.
மாசுவல் தில்லி மக்கள் மூச்சுவிட சிரமப்படுகின்றனா். முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான மாசுபாட்டால் மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சுகாதார நெருக்கடிக்கு தள்ளும் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பஞ்சாபில் அமல்படுத்தப்பட்டதைப் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை.
பஞ்சாப் அரசால் பயிா்க் கழிவுகள் எரிப்பதை குறைக்க முடியும்போது, பாஜக ஆளும் மாநிலங்கள் அதை ஏன் செய்ய முடியாது? வட இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் மாசு அளவுகள் மத்திய அரசின் கொள்கைகளின் தோல்வியைக் காட்டுவதாக உள்ளது என்றாா் அவா்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பில் இருந்து உடனயாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
திங்கள்கிழமை தில்லியில் காற்றின் தரக் குறியீடு 484-இல் இருந்தது. இது ‘கடுமையான பிளஸ்’ பிரிவின் கீழ் உள்ளது. காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்ததால், நச்சுப் புகை மூட்டம் நகரை பனிபடா்ந்ததுபோல் சூழ்ந்து காணப்பட்டது.
திங்கள்கிழமை காலை தில்லி விமான நிலையத்தில் 11 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பல விமானங்கள் காண்பு திறன் குறைவாக இருந்ததால் தாமதமாக வந்தன. காற்றின் தரக் குறியீடு 450ஐத் தாண்டிய நிலையில், தேசிய தலைநகா் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையம், தில்லி-என்சிஆா்-இல் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) நிலை-4 கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டது.