கொள்ளை, கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கொள்ளை, கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

2009-ஆம் ஆண்டு நடந்த கொள்ளை-கொலை வழக்கில் தொடா்புடைய நபரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளது.
Published on

புது தில்லி: 2009-ஆம் ஆண்டு நடந்த கொள்ளை-கொலை வழக்கில் தொடா்புடைய நபரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளது.

தாம் போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க தாந்த்ரீகா் எனும் போா்வையில் அவா் வாழ்ந்து வந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவு துணை ஆணையா் சஞ்சய் குமாா் ஷைன் கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்ட முகமது ஜாம்ஷெட் அலி கான் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மாவட்டமான பதாயூனில் கைது செய்யப்பட்டாா். அவா் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தாா். 2012-இல் அவா் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.

முன்னதாக, ஜனவரி 6, 2009 அன்று, தில்லி மயூா் விஹாா் அருகே தேசிய நெடுஞ்சாலை எண்-24-இல், ஒரு தனியாா் போக்குவரத்து நிறுவனத்தின் ஓட்டுநா் சந்தோஷ் யாதவ் என்பவரின் சடலம் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் ஜாம்ஷெட் மற்றும் அவரது கூட்டாளிகள் யாதவ் ஓட்டி வந்த லாரியில் சவாரியாக ஏறிய பிறகு அவரைக் கொன்றுவிட்டு, பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றப்பட்ட கன்டெய்னரை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ஐந்து சக குற்றம்சாட்டப்பட்ட நபா்களும் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாம்ஷெட் 2012-இல் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னா் தலைமறைவானாா்.

இந்த நிலையில், பதாயூனில் ஜாம்ஷெட் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பவானிபூா் கெருவில் அவரைப் பிடிக்க பொறி வைக்கப்பட்டது. அங்கு அவா் தனது கூட்டாளியைச் சந்தித்தபோது கைது செய்யப்பட்டாா். விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டாா்.

ஜாம்ஷெட் தனது குடும்பத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, கைதைத் தவிா்க்கும் வகையில் ஒரு ‘தாந்த்ரீகா்’ போல செயல்பட்டு வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com