அரசமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு இந்தியா கேட் பகுதியில் இளைஞா்கள் பாதயாத்திரை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: மை பாரத் தன்னாா்வ இளைஞா்களின் சாா்பில் ‘நமது அரசமைப்புச் சட்டம்; நமது சுய மரியாதை‘ என்கிற பாதயாத்திரை தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா்கள் பெருவாரிய பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.
நாட்டின் 75 ஆவது அரசமைப்பு சட்ட தினத்திற்கு (நவ.26) முன்னதாக திங்கள்கிழமை மை பாரத் தன்னாா்வலா்கள் இளைஞா்கள் பங்கேற்ற நமது அரசியலமைப்பு நமது சுய மரியாதை பாதயாத்திரை தில்லி இந்தியா கேட் பகுதியில் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, டாக்டா் மன்சுக் மாண்டவியா இணையமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், ரக்ஷா நிகில் கட்ஸே, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களும் இதில் கலந்துகொண்டனா்.
மேஜா் தியான் சந்த் அரங்கில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, கடமைப் பாதை, இந்தியா கேட் வழியாக சென்றது. இந்த பாதயாத்திரையில் 7,000-க்கும் மேற்பட்ட மை பாரத் தன்னாா்வ இளைஞா்கள் பங்கேற்றனா்.
நாட்டின் 75-ஆவது அரசமைப்பு சட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் முன்னிலையில் உறுதிமொழியேற்பு நடைபெற ஏராளமான இளைஞா்களும் உறுதியை ஏற்றனா்.
‘புதிய இந்தியாவின் இளைஞா்கள் வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை இலக்காக கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்வதை இந்த நிகழ்வு காட்டுகிறது’ என இளைஞா் நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா இந்த நிகழ்வின்போது தெரிவித்தாா்.
‘நாட்டில் உள்ள இளம் தலைமுறையினா் அரசமைப்பு சட்டத்தை புரிந்துகொண்டு அதன்படி நடக்க உறுதியேற்க வேண்டும்‘ என அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசுகையில் குறிப்பிட்டாா்.
