பொது இடத்தில் 5 போ் கூடுவதற்கு தடை உத்தரவு வாபஸ்! - தில்லி காவல்துறை
செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 5 வரை தேசிய தலைநகரில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் பொது இடத்தில் கூடுவதைத் தடைசெய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி காவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவின்படி, தலைநகரில் செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 5 வரை பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், துப்பாக்கிகள், பேனா்கள், பதாகைகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கும், எந்தவொரு பொது இடத்திலும் தா்ணாவில் ஈடுபடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுவதற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மேற்கோள்காட்டி தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி வியாழக்கிழமை ஆஜராகி இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, ‘காவல் ஆணையரின் உத்தரவு தசரா பண்டிகைக் காலத்தில் நகரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த உத்தரவு காரணமாக ராம் லீலா நடைபெற முடியாமல் போகும். துா்கா பூஜை விழாக்களையும் இந்த உத்தரவு பாதிக்கிறது. இதனால், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
அப்போது, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘‘காவல்துறை ஆணையரின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், இதேபோன்ற விவகாரத்தை எழுப்பும் மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வகையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது’ என்றாா்.
காவல் ஆணையரின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக துஷாா் மேத்தா கூறியதை மேனகா குருசாமியிடம் தலைமை நீதிபதி தெரிவித்தாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், அக்டோபா் 2-ஆம் தேதி நள்ளிரவு ஆணையரின் பழைய உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. தில்லி காவல் துறையின் முந்தைய உத்தரவின்படி, புது தில்லி, வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலும், பிற மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிா்ந்து கொள்ளும் தில்லியின் அனைத்து காவல் நிலையங்களின் அதிகார வரம்புகளிலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 163-ஐ (முந்தைய சிஆா்பிசியின் 144 பிரிவு) அமல்படுத்த காவல் ஆணையா் உத்தரவிட்டிருந்தாா் என்றாா் அவா்.
இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த உத்தரவில், ‘‘உத்தேச வக்ஃபு திருத்த மசோதா மற்றும் சதா் பஜாா் பகுதி ஷாஹி ஈத்கா விவகாரம், எம்.சி.டி. நிலைக்குழு தோ்தல்களின் அரசியல் ரீதியாக உருவான பிரச்சினை, நிலுவையில் உள்ள டியுஎஸ்யு தோ்தல் முடிவுகள் அறிவிப்பு போன்ற தற்போதைய பல்வேறு பிரச்னைகள் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கருத்தில்கொள்ளும்போது தில்லி உணா்திறன் மிக்கதாக இருக்கிறது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபா் 2ஆம் தேதி புது தில்லி, மத்திய மாவட்டப் பகுதிகளில் மிக, மிக முக்கியப் பிரமுகா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்’ என முந்தைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.