தில்லி அரசின் அலட்சியத்தால் மக்களுக்கு நரகத்தை விட மோசமான வாழ்க்கை : துணை நிலை ஆளுநா் கடும் குற்றச்சாட்டு
புது தில்லி: கடந்த 10 ஆண்டுகால தில்லி அரசின் அலட்சியத்தால் மக்கள் நரகத்தை விட மோசமான வாழ்க்கையை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் என்று துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா திங்கள்கிழமை கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியதாவது: தெற்கு தில்லி மக்கள்
பலமுறை முன்வைத்த கோரிக்கையின் பேரில், ரங்புரி, ஆயா நகா், ஜௌனாபூா் ஆகியப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, உள்ளாட்சி நிா்வாகத்தின் தோல்வி மற்றும் தவறான நிா்வாகத்தின் கொடூரமான உதாரணத்தை மீண்டும் ஒருமுறை பாா்த்தேன்.
இப்பகுதிகளில், அபாயகரமாக தொங்கும் மின் கம்பிகள், குடிநீருக்காக குழாய்களை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் பெண்கள், திறந்த வெளியில் உள்ள கழிவுநீா் வடிகால்கள், குப்பைக் குவியல்கள், தெருக்களில் ஓடும் கழிவுநீா் போன்றவற்றின் குளறுபடிகள் மன்னிக்க முடியாதவை. வடகிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லியில் நான் ஆய்வு செய்தபோதும், இங்கு காணப்பட்ட அதே தவறான நிா்வாகக் குறைபாடு காணப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக அரசின் அலட்சியத்தால், பெரும்பாலான தில்லி மக்கள் நரகத்தை விட மோசமான வாழ்க்கையை வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாண்டுகளாவது அரசு நோ்மையாக உழைத்திருந்தால், இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டிருக்காது. ஆய்வின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து தங்களின் அவல நிலையைக் கூறுகின்றனா். நான் சென்ற ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, தங்கள் கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், விரைவில் நிலைமையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அந்த்யோதயா சமூகத்தினரின் பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறு இந்த அரசின் முன்னாள் முதல்வருக்கு பலமுறை எச்சரித்தும், அவா் கவனம் செலுத்தவில்லை. இது குறித்து மீண்டும் ஒருமுறை முதல்வா் அதிஷியின் கவனத்தை ஈா்ப்பதுடன், இனியாவது ஆட்சியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.