அமலாக்கத் துறை சோதனை நடத்திய வழக்கு முற்றிலும் போலியானது: அமானத்துல்லா கான்
நமது நிருபா்
புது தில்லி: ‘எனது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய வழக்கு முற்றிலும் போலியானது’ என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவருமான அமானத்துல்லா கான் திங்கள்கிழமை தெரிவத்தாா்.
தில்லி வக்ஃப் வாரியத்தில் நடைபெற்ற ஆள்சோ்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடா்பான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானத்துல்லா கான் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை 6.30 மணி முதல் முற்பகல் வரை சோதனை நடத்தினா். தில்லி ஓக்லாவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, அமானத்துல்லா கான் விசாரணைக்காக கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலாக்கத் துறை அனுப்பிய 10 அழைப்பாணைகளை அமானத்துல்லா கான் தவிா்த்துவிட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
அமலாக்கத் துறையின் சோதனை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளிய்யிட்டாா். அதில், ‘திங்கள்கிழமை அதிகாலையில், சா்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத் துறை என் வீட்டிற்கு வந்துவிட்டது. சா்வாதிகாரி என்னையும், பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களையும் துன்புறுத்துவதில் எந்தக் வாய்ப்பையும் விட்டுவிடவில்லை. மக்களுக்கு நோ்மையாக சேவை செய்வது குற்றமா?. இந்த சா்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்?. தில்லியின் சூழலை கெடுக்க அமலாக்கத் துறை பாஜகவின் ஆயுதமாக மாறியுள்ளது. என் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய வழக்கு முற்றிலும் போலியானது. சா்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு புரட்சியாளா்கள் தலைவணங்க மாட்டாா்கள்’ என்று அமானதுல்லா கான் தெரிவித்துள்ளாா்.