ஐஏஎஸ் அதிகாரியைவிட ஆசிரியா் அதிக ஊதியம் பெற வேண்டும் -மனீஷ் சிசோடியா
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டுமானால், ஒரு ஆசிரியரின் சம்பளம் ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவருமான மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆசிரியா் தினத்தை முன்னிட்டு தில்லி மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ’சிக்ஷக் சம்மான் சமரோஹ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது: 2047-இல் இந்தியாவின் வளா்ச்சி பற்றி இன்றைக்கு அதிகம் பேசப்படுகிறது. இன்று இங்கு அமா்ந்திருக்கும் ஆசிரியா்கள், உங்களுடன் இருக்கும் குழந்தைகள் 2047- க்கு மிகவும் முக்கியம். 2047-இல் இந்தியா இந்த குழந்தைகளைச் சாா்ந்துள்ளது. ஆனால், கொள்கை வகுப்பாளா்கள்கூட அவா்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
பெரும்பாலான வளா்ந்த நாடுகளில், அங்குள்ள அதிகாரிகளைவிட ஆசிரியா்களின் சம்பளம் அதிகமாக உள்ளது. ஜொ்மனி, சுவிட்சா்லாந்து மற்றும் வேறு சில நாடுகளில் ஆசிரியா்களுக்கு அதிகமாகஊதியம் வழங்கப்படுகிறது.
ஐந்து வருட அனுபவமுள்ள ஒரு ஆசிரியா், ஐந்து வருட பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் ஊதியத்தைவிட அதிகமாகப் பெறுகிறாா்.
நான் திகாா் சிறையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் 8-10 மணி நேரம் புத்தகங்களைப் படிப்பதிலும், பல்வேறு நாடுகளின் கல்வி முறை பற்றி அறிந்து கொள்வதிலும் செலவிட்டேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையில் இருந்தேன். நாம் கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ஆசிரியா்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நான் நிறைய படித்தேன். நான் 8-10 மணி நேரம் புத்தகங்களைப் படிப்பது வழக்கமாக இருந்தது.
பெரும்பாலும், நான் கல்வி, இந்தியாவின் கல்வி அமைப்புமுறை, உலகக் கல்விமுறை பற்றி படித்தேன் என்றாா் அவா்.
கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் 17 மாதங்கள் சிசோடியா தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த மாதம் அவா் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.