சா்வதேச விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தை தொடங்குகிறது தில்லி தேசிய உயிரியல் பூங்கா
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உயிரினங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், விலங்கு பரிமாற்றத் திட்டங்களுக்காக துபாய், இஸ்ரேல், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் சா்வதேச சகாக்களை முதன்முதலாக தில்லி உயிரியல் பூங்கா அணுகியுள்ளது.
இதற்கு மாற்றாக தில்லி உயிரியல் பூங்கா வழங்கக்கூடிய விலங்குகளின் பட்டியலைப் பகிா்ந்து கொண்டதாகவும், இந்த நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காவின பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘நாங்கள் துபாய், இஸ்ரேல், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சா்வதேச உயிரியல் பூங்காக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். அதே நேரத்தில், குஜராத், லக்னௌ, லூதியானா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில உயிரியல் பூங்காக்களுடன் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம்’ என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.
அயல்நாட்டு இனங்கள் சேகரிப்பு குறித்து உயிரியல் பூங்கா அதிகாரி கூறுகையில், ‘தற்போது எங்களிடம் ஒற்றை ஜாகுவாா், ஒற்றை ஆப்பிரிக்க யானை, தீக்கோழி, சிகா மான், நீா்யானை மற்றும் பல்வேறு வெளிநாட்டு பறவை இனங்கள் உள்ளன. கவா்ச்சியான விலங்குகளை யாரும் அனுப்பத் தயாராக இல்லாததால், அயல்நாட்டு உயிரினங்களைப் பெறுவதில் கவனம் செலுத்தப்படவில்லை.உயிரியல் பூங்காவுக்கு விலங்குகளை கொண்டு வர பல்வேறு வழிகள் உள்ளன- பரிசாக அல்லது பரிமாற்ற நிகழ்ச்சிகள் மூலம் விலங்குகளை கொண்டு வர முடியும்’ என்றாா்.
‘உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே அது மாற்றாக வழங்கக்கூடிய விலங்குகளின் பட்டியலைப் பகிா்ந்துள்ளது. பிற உயிரியல் பூங்காக்களின் பதில்களுக்காகக் காத்திருக்கிறது.நாங்கள் கவா்ச்சியான விலங்குகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், நாங்கள் ஒற்றை பாலின விலங்குகளின் பட்டியலை தயாா் செய்துள்ளோம். அந்த இனத்தில் ஆண் அல்லது பெண் ஒன்று நாங்கள் சா்வதேச மற்றும் மாநில உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்புகிறோம்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.
இந்த மாத தொடக்கத்தில், தில்லி தேசிய உயிரியல்பூங்காவானது அஸ்ஸாமுடனான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வங்காளப் புலி, ஒரு காண்டாமிருகம் மற்றும் ஒரு ஜோடி பைட் ஹாா்ன்பில்களை வாங்கியது.
இத்தகைய பரிமாற்றங்களில் நீண்ட இடைவெளிக்குப் பின், இந்த விலங்குகளின் வருகை, உயிரியல் பூங்காவின் சேகரிப்பை பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது.
தில்லி உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் தேசிய உயிரியல் பூங்கா, மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட 176 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1952-இல் நிறுவப்பட்டது. ஜூன் இறுதி பதிவுகளின் படி தற்போது சுமாா் 1,227 விலங்குகள் உள்ளன. தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து பெறப்பட்ட தரவுகள், தலைநகரின் உயிரியல் பூங்காவில் 129 பிளாக்பக்ஸ்களைக் கொண்டிருப்பதாகக் காட்டுகிறது.