
நமது நிருபா்
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு அருகே கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (மெகா காா் பாா்க்கிங்) அமைப்பது தொடா்பான வழக்கில் உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு, கேரள அரசுத் தரப்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் விசாரணையை டிச.9-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்திய நில அளவைத் துறை (சா்வே ஆஃப் இந்தியா) தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கைக்கு தமிழகம் தரப்பில் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கேரள அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஜூலை 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமா்வு, ‘அரசியலமைப்பின் 131-ஆவது ஷரத்தின் கீழ் இந்த வழக்கு பராமரிக்கத்தக்கதா?, 1886-ஆம் ஆண்டைய குத்தகை ஒப்பந்தம் செல்லுபடியாகுமா? மாறிவிட்ட சூழ்நிலையில் செயல்படுத்த முடியுமா? மனுதாரருக்கு என்ன நிவாரணம் கிடைக்க உரிமை உள்ளது? என்பது போன்ற 11 விவகாரங்களை கேள்வியாக எழுப்பியிருந்தது. இதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறும் இரு தரப்புகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோரும், கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தாவும் ஆஜராகி ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.
இதையடுத்து, கூடுதல் ஆவணங்கள் ஏதும் இருப்பின் அதை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை டிச.9-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தனா்.
பின்னணி: கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பிரம்மாண்ட காா் பாா்க்கிங் அமைக்க கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய நில அளவைத் துறை கூட்டு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்திய நில அளவைத் துறை ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அதன் அறிக்கையை கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் தமிழகம், கேரளம் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.