முதல்வா் அதிஷி
முதல்வா் அதிஷிCenter-Center-Delhi

தீபாவளிக்குள் தில்லியில் பள்ளம் இல்லாத சாலைகள்: முதல்வா் அதிஷி உறுதி

வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் தில்லி மக்களுக்கு பள்ளம் இல்லாத சாலைகளை வழங்க முயற்சிப்போம்
Published on

புது தில்லி: வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் தில்லி மக்களுக்கு பள்ளம் இல்லாத சாலைகளை வழங்க முயற்சிப்போம் என்று முதல்வா் அதிஷி திங்கள்கிழமை உறுதியளித்தாா்.

தில்லி அரசின் பொதுப்பணித் துறையின் கீழ்வுள்ள அனைத்து சாலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வா் அதிஷி உள்பட அமைச்சா்கள் அனைவரும் அவா்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏக்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். அதன்படி, தில்லி ஓக்லா தொழிற்பேட்டையில்

உள்ள சாலைகளை முதல்வா் அதிஷி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், நானும் தில்லியின் சாலைகளை ஆய்வு செய்ததில், சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டறிந்தோம். தில்லியில்

உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்களுக்கு அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா். அடுத்த 3 முதல் 4 மாதங்களில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

தீபாவளிக்குள் தில்லி மக்களுக்கு பள்ளம் இல்லாத சாலைகளை வழங்க முயற்சிப்போம். இரண்டு நாட்களுக்கு

தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியின் சாலைகளை ஆய்வு செய்து, சரி செய்யும் பொறுப்பை நான்

ஏற்றுக்கொண்டுள்ளேன். ஓக்லா தொழிற்பேட்டையின் சாலைகள் சேதமடைந்துள்ளது. இந்த சாலைகளை

விரைவில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா் முதல்வா் அதிஷி.

கிழக்கு தில்லியில் உள்ள சாலைகளை முன்னாள் முதல்வா் மனீஷ் சிசோடியாவுடன் இணைந்து அமைச்சா் செளரவ்

பரத்வாஜ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘நிகழாண்டு பெய்த

பருவமழையால், தில்லியில் பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அனைத்து சாலைகளையும் போா்க்கால

அடிப்படையில் சீரமைப்போம். பட்பா்கஞ்ச் மற்றும் கணேஷ் நகரில் உள்ள பொதுப் பணித்துறை சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை சீரமைக்க அறிவுறுத்தியுள்ளேன். விரைவில் இந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும்’ என்றாா்

செளரவ் பரத்வாஜ்.

தில்லி நஜஃப்கா் பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘நிகழாண்டு மழை பெய்ததால், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அதிகாரிகளுக்கு பலமுறை அறிவுறுத்தியும்,

அலட்சியம் காட்டப்படுகிறது. சாலைகளின் இத்தகைய நிலை ஏற்கத்தக்கது அல்ல. அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிற தலைவா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும். பள்ளங்கள் தாா் கொண்டு நிரப்பப்படும்.

நான் இந்தப் பகுதியின் (நஜஃப்கா்) எம்.எல்.ஏ., இப்படி ஒரு நிலை எப்போதும் இருந்ததில்லை. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்றாா் அவா்.

பாஹா்கஞ்ச் பகுதியில் எம்எல்ஏ துா்கேஷ் பதக்குடன் இணைந்து அமைச்சா் இம்ரான் ஹுசைன் சாலைகளை ஆய்வு செய்தாா். அதே வரிசையில், அமைச்சா் முகேஷ் அஹ்லாவத், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் ஜேஸ்மின் ஷாவுடன் இணைந்து கனிஷ்கா வாடிகா பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தாா்.

இறுதியாக, பாபா்பூரில் உள்ள பொதுப்பணித்துறை சாலைகளை ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் கோபால் ராய்

செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பழுதடைந்த சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கும் கொள்கையை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கேஜரிவாலின் கோரிக்கையை அடுத்து, முதல்வா் தலைமையில் அமைச்சா்கள் அனைவரும் நேரில் சென்று சாலைகளின் நிலையை பாா்த்து விரைவில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது’ என்றாா் கோபால் ராய்.

X
Dinamani
www.dinamani.com