சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து வங்கிக் கடன் பெற்றதாக தில்லி நபா் கைது

Published on

சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து, வங்கிக் கடன்களைப் பெறுவதற்காக இறந்தவா்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நந்த் நாக்ரியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் (45) கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களைப் பெற்ாக காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. சுரேஷ் ஒரு சைபா் கஃபே நடத்தி வந்தாா். மேலும் பல நிதி மோசடி வழக்குகளில் ஈடுபட்டதால் பல ஆண்டுகளாக அவா் கண்காணிப்பில் இருந்தாா்.

2015-ஆம் ஆண்டு சரிதா விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக ஏப்ரல் 2- ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். ஒரு வங்கியில் இருந்து ரூ.3.2 கோடி கடன் பெற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. புகாா்தாரரான சோனல் ஜெயின், தனது மறைந்த கணவா் மகேந்தா் குமாா் ஜெயின் பெயரில் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினாா்.

பல ஆண்டுகளாக விரிவான விசாரணைகள் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இறுதியாக போலி ஆவணங்களில் உள்ள கட்டைவிரல் ரேகைகளின் தடயவியல் பகுப்பாய்வு நடத்தப்பட்டு, கைரேகை பதிவுகளுடன் ஒப்பிடப்பட்டது. இது இந்த வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையை வழங்கியது.

சுரேஷ் ஒரு விரிவான குற்ற வரலாற்றைக் கொண்டுள்ளாா். அவரது பெயா் 18 வழக்குகளில் சோ்க்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டவை மற்றும் 13 வழக்குகள் சிபிஐ விசாரணையின் கீழ் உள்ளன.

விசாரணையின் போது, சுரேஷ் போலி விற்பனை பத்திரங்கள், மின்-முத்திரை தாள்கள் மற்றும் போலி ரப்பா் ஸ்டாம்புகள் தயாரித்ததாக ஒப்புக்கொண்டாா். மேலும், வங்கிக் கடன்களை மோசடியாகப் பெறுவதற்காக பல வாடிக்கையாளா்களுக்கு போலி ஆவணங்களை வழங்கியதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட இடங்களையும் அவா் வெளிப்படுத்தினாா் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது கூட்டாளிகளை அடையாளம் காணவும், நிதி நிறுவனங்கள் முழுவதும் இதேபோன்ற கடன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள பரந்த குற்றவியல் வலையமைப்பைக் கண்டறியவும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com