கடத்தப்பட்டு தில்லியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்பு!

Published on

கடத்தப்பட்டு தில்லி ஜிபி சாலையில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 வயது பெண்ணை காவல்துறை குற்றப்பிரிவு மீட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். விபசார விடுதியின் ‘மேலாளா்’ சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அந்தப் பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தில்லிக்கு அழைத்துச் வரப்பட்டு, சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா்.

தில்லி வந்த பிறகு தனது குடும்பத்தினருடனான தொடா்பை இழந்த அவா், சுமாா் 10 நாள்களுக்கு முன்பு தனது சகோதரரை அழைத்து தனது நிலைமை குறித்து அவருக்குத் தெரிவித்தாா். பின்னா், அவரது சகோதரா் ஒரு அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) உதவியுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்ஹெச்ஆா்சி) அணுகினாா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 5- ஆம் தேதி ஒரு போலீஸ் குழு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சோதனை நடத்தியதில் ஜிபி சாலையில் உள்ள ஒரு விபசார விடுதியில் இருந்து அந்தப் பெண் மீட்கப்பட்டாா். அதன் மேலாளா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த அந்தப் பெண் 5-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். திருமணமான அந்தப் பெண் ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்றவா் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தில்லியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஒரு பெண்ணால் கடத்தப்படுவதற்கு முன்பு அவா் வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்துள்ளாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com