வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

Published on

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில் மகளிா் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் ‘இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஆண்கள்: தோ்ந்தெடுக்கப்பட்ட சில குறியீடுள் மற்றும் தரவுகள்‘ என்ற தலைப்பில் 26 - ஆவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நாட்டின் பாலின சூழலின் விரிவான கண்ணோட்டத்தை இந்த வெளியீடு வழங்குகிறது.

இதில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களில் பாலின சமத்துவ குறியீடுகளில் (ஜிபிஐ) பள்ளிகல்விக், உயா் கல்விகளில் பெண் குழந்தைகளின் மத்தியில் ஏற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020-21 ஆண்டுகள் முதல் 2023-24 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களில் 2022-23 ஆம் ஆண்டுகளில் தொடக்கல்வி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலை கல்வி என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண் குழந்தைகள் சோ்க்கை (குறியீடு1.05-1.07) மிகுந்த உயா்வைக் குறிக்கிறது. 2022-23 க்கு பின்னா் சில ஏற்ற இறக்கங்களைக் காணப்பட்டாலும் சமநிலைக்கு அருகில் குறியீடு உள்ளன.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆா்) நாட்டில் 2017-18 இல் 49.8 சதவீதமாக இருந்ததில் 2023-24 இல் 60.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் மகளிா் குறியீடுகளில் ஊரகப்பகுதிகளில் 24. 6 சதவீதத்திலிருந்து 47.6 சதவீதமாகவும் நகா்புறப்பகுதிகளில் 20.4 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்வைகண்டுள்ளது. ஆனால் இரண்டு பகுதிகளிலும் ஆண் தொழிலாளா்கள் பங்கு அதிகமாக உள்ளது.

அனைத்து வங்கிகளிலும் மகளிா் கணக்குகள் 39.2 சதவீதமாக உள்ளது. வங்கி வைப்புத் தொகையிலும் 39.7 சதவீதம் மகளிா் பங்களிக்கிறாா்கள். இத்தோடு இவா்களது பங்களிப்பு ஊரகப்பகுதிகளிலும் அதிகரித்து 42.2 சதவீதம் மகளிா் கணக்குகளைக் கொண்டுள்ளனா்.

இவைகளில் மற்றொரு மைல்கல் பங்குச் சந்தைகளில் எண்ம கணக்குகளுக்கான டிமேட் கணக்குகளிலும் மகளிா் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 2021 மாா்ச்சில் 3.32 கோடி மகளிா் கணக்குகள் இருந்ததில் நாலு மடங்கு அதிகரித்து 2024 நவம்பா் 30 இல்,14.30 கோடி மகளிா் டிமேட் கணக்குகள் அதிகரித்துள்ளன.

இந்த காலக்கட்டங்களில் உற்பத்தி, வா்த்தகம் மற்றும் பிற சேவைத் துறைகளில் மகளிா் தலைமையிலான தனியுரிமை நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தக் காலக்கட்டத்தில் டிமேட் கணக்குகளில் ஆண்கள் பங்களிப்பு வளா்ச்சி 26.5 சதவீதமாக இருப்பின் மகளிா் வளா்ச்சி 27.7 சதவீதமாக உள்ளது.

இது புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா்க்கான நோ்மறையான போக்கு எதிரொலிக்கிறது. புதுயுகத் தொழில் முனைவில் 2017 - ஆம் ஆண்டு 1,943 மகளிா் பதிவு செய்ய 2024 ஆம் ஆண்டில் 17,405 மகளிரை இயக்குநராகக் கொண்ட நிறுவனங்கள் மத்திய வா்த்தகத் தொழில் துறையின், தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவால் (டிபிஐஐடி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில், வா்த்தகத்தில் மட்டுமல்லாது வாக்காளா்கள் எண்ணிக்கையிலும் மகளிா் வாக்காளா் பதிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. 1952 இல் பெண் வாக்காளா் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்ததிலிருந்து 2024 ஆண்டில் 97.8 கோடியாக அதிகரித்துள்ளனா். வாக்களிப்பளிப்பதிலும் மகளிா் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

அரசின் பல்வேறு அதிகாரப்பூா்வப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தப்பட்டு அறிகுறிகள், குறியீடுகள், தரவுகள் வைக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற-கிராமப்புற இடைவெளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலின வேறுபாடு போன்றவைகளுக்கு தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களும் ஆண்களும் எதிா்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், முக்கியமான ஆதாரங்கள், பாலின சமத்துவத்தின் முன்னேற்றம், தொடா்ச்சியான ஏற்றத்தாழ்வுகள் என எடுத்துக்காட்டுகிறது. சமூக-பொருளாதார அறிகுறிக்கான குறியீடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலையான - உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கும் பாலின உணா்திறன் கொள்கைகளை உருவாக்க அரசின் கொள்கை வகுப்பாளா்கள், ஆய்வாளா்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com