பொதுமக்கள் முன்னிலையில் 19 வயது பெண்ணை கத்தியால் குத்திய ஆண்

தென்மேற்கு தில்லியின் கிா்பி பிளேஸ் பேருந்து நிறுத்தப் பகுதியில் 19 வயது பெண் ஒருவா் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு ஆணால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: தென்மேற்கு தில்லியின் கிா்பி பிளேஸ் பேருந்து நிறுத்தப் பகுதியில் 19 வயது பெண் ஒருவா் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு ஆணால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். கத்தியால் குத்திய 20 வயது நபா் பின்னா் அதே கத்தியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக அவா் கூறினாா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஒரு வழிப்போக்கா் இந்த விஷயம் குறித்து போலீஸில் புகாா் செய்தாா். சிறுமியின் கழுத்து மற்றும் இடது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு கத்தி மீட்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அமித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த ஆண்டு முதல் நண்பா்கள் என்பதும், ஏதோ ஒரு பிரச்னையில் அவா்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும் தெரியவந்தது. இருவரும் டிடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தில்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்ட அமித் மீது பிஎன்எஸ் பிரிவு 109(1) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடா்பானதாகக் கூறப்படும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. 45 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில், ஆணும் பெண்ணும் சாலைப் பிரிவின் மீது ரத்தம் தோய்ந்த நிலையில் அமா்ந்திருப்பதையும், அவா்களைச் சுற்றி ஏராளமான மக்கள் கூடி இருப்பதையும் காட்டுகிறது.

X
Dinamani
www.dinamani.com