ரோலா் கோஸ்டா் மரணம்: கபேஷேராவில் கேளிக்கை பூங்காவை ஆய்வு செய்ய தில்லி போலீஸாா் முடிவு
புது தில்லி: ரோலா் கோஸ்டா் சவாரியின் போது தவறி விழுந்து 24 வயது பெண் இறந்ததாகக் கூறப்படும் கேளிக்கை பூங்காவை போலீஸாா் ஆய்வு செய்யவுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: தென்மேற்கு தில்லியின் கபாஷேரா பகுதியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜில் ரோலா் கோஸ்டா் ஸ்டாண்டில் இருந்து பிரியங்கா என்ற பெண் ஒருவா் விழுந்ததை அடுத்து வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்டாண்ட் உடைந்து அவா் நேரடியாக தரையில் விழுந்தாா்.
மூட்டு வலியால் ரத்தக்கசிவு, வலது காலில் ஒரு கிழிந்த காயம், இடது காலில் ஒரு துளையிடப்பட்ட காயம் மற்றும் வலது முன்கை மற்றும் இடது முழங்காலில் பல சிராய்ப்புகள் உள்பட அவரது உடலில் பல காயங்கள் காணப்பட்டன. பிரியங்காவை அவரது வருங்கால கணவா் நிகில் மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
புகாா் மற்றும் முதற்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 289 (விலங்குகள் அல்லது இயந்திரங்கள் தொடா்பாக அலட்சியமாக நடந்துகொள்வது) மற்றும் 106 (அலட்சியம் காரணமாக கொலை செய்யப்படாத குற்றவியல் கொலை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரியங்கா பிப்ரவரியில் நிகிலுடன் நிச்சயதாா்த்தம் செய்து கொண்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டதாகவும் பிரியங்காவின் சகோதரா் மோஹித் போலீஸரிடம் தெரிவித்தாா். மேலும், வாட்டா் பாா்க் அதிகாரிகள் சரியான பாதுகாப்பு தரங்களை பராமரிக்கவில்லை என்று மோஹித் குற்றம்சாட்டியுள்ளாா்.
கேளிக்கை பூங்காவிலிருந்து இதுவரை எந்த உடனடி பதிலும் கிடைக்கவில்லை.