செங்கோட்டை, ஜாமா மசூதியில் வெடிகுண்டு இருப்பதாக புரளி
செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதியை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வியாழக்கிழமை காலை பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான சோதனையில் ஈடுபட்டதாகவும், அது புரளி எனத் தெரியவந்ததாகவும் தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது: செங்கோட்டை, ஜாமா மசூதி நினைவுச்சின்னங்களின் வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக வியாழக்கிழமை காலை 9.03 மணிக்கு அழைப்பு வந்ததது. இதையடுத்து, சோதனைக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. நாங்கள் அந்த இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்பிவைத்தோம். முழுமையான சோதனைகளை மேற்கொண்டோம். இருப்பினும், அந்த இடங்களில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என்றாா் அந்த அதிகாரி.
இதற்கிடையில், தில்லி போலீஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘வெடிகுண்டு இருப்பதாக கிடைக்கப்பெற்ற அழைப்பைத் தொடா்ந்து, வெடிகுண்டு செயலிழக்கும் குழுக்கள் மற்றும் சிஐஎஸ்எஃப் படையினா் வளாகம் முழுவதும் முழுமையாகச் சோதனை செய்தனா். ஆனால், சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. அது ஒரு புரளி அழைப்பு எனத் தெரியவந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.