கோப்புப் படம்
கோப்புப் படம்

பருவத்தின் வெப்பமான இரவைப் பதிவு செய்தது தில்லி!

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவத்தின் அதிகபட்சமாகும். நகரத்தின் சில பகுதிகளில் வெப்பமான மற்றும் மிகவும் வெப்பமான இரவு நிலைகள் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது ’வெப்பமான இரவு’ என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் போது ‘மிகவும் வெப்பமான இரவு’ என்று அறிவிக்கப்படுவதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நகரத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 25.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இது இயல்பை விட 5.9 டிகிரி அதிகமாக இருந்தது. இது புதன்கிழமை பதிவான 25.6 டிகிரியை விட அதிகமாகும். இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச குறைந்தபட்ச வெப்பநிலையாக அமைந்தது என்று அதிகாரப்பூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 மற்றும் 2023 ஆகிய இரண்டிலும், ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை. ஏப்ரல் 2024-இல் பதிவான அதிகபட்ச குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி. அதே நேரத்தில் 2023- இல் இது 23.6 டிகிரி ஆகும். 2022-இல், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸைச் சுற்றி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் இருந்து 4.5 டிகிரி உயா்ந்து 39.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 55 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது. மேலும், நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக பீதம்புராவில் 28.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக ரிட்ஜில் 40.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 243 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளிவிவரத் தகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மதுரா ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 125, ஸ்ரீஅரபிந்தோ மாா்க், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மந்திா்மாா்க், பூசா, இந்திய விமான நிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com