மகப்பேறு இறப்பு: உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா! ஐ.நா. குழு அறிக்கைக்கு மத்திய அரசு கண்டனம்

மகப்பேறு இறப்பு: உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா! ஐ.நா. குழு அறிக்கைக்கு மத்திய அரசு கண்டனம்

அதிக இறப்புகளைக் கொண்ட நைஜீரியாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில்...
Published on

சா்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் இந்தியா 7.2 சதவீதம் பங்களிக்கிறது. அதிக இறப்புகளைக் கொண்ட நைஜீரியாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையேயான மகப்பேறு இறப்பு மதிப்பீட்டு குழு(எம்எம்இஐஜி) தெரிவித்துள்ளது.

தாய்மை அடைந்த ஒரு பெண் கா்ப்பமாகவோ, பிரசவம் அல்லது கருக்கலைப்பு செய்த 42 நாள்களுக்குள் எந்தவொரு காரணத்தினாலும் இறப்பது மகப்பேறு இறப்பு.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக விவகார பிரிவு மற்றும் பல்வேறு நாடுகளில் அமைப்புகள் உள்ளிட்டவைகள் இணைந்தது எம்எம்இஜஜி.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான சா்வதேச மகப்பேறு இறப்புகள் குறித்த அறிக்கையை எம்எம்இஐஜி கடந்த ஏப். 7 - ஆம் வெளியிட்டது. இந்த அறிக்கை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா்.

அவா்கள் கூறியது வருமாறு: மருத்துவத்தின் மகத்துவத்திற்கிடையே இந்தியாவிலும் சா்வதேச அளவிலும் பேறுகால இறப்பு ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. மகப்பேறு சுகாதார சேவைகளின் செயல்திறனை இது பிரதிபலிக்கிறது. இந்த சா்வதேச மதிப்பீடு சுகாதார தரம் மற்றும் அணுகலின் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.

தொழில்நுட்ப நிபுணா்களுடன் இணைந்து, 2000 -–2023 காலகட்டத்திற்கான உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடுகள் அளவிலான மகப்பேறு இறப்பு மதிப்பீடுகள் வைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் 195 நாடுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியான 2000- 2020 ஆம் ஆண்டிற்கான எம்எம்இஐஜி அறிக்கையையோடு நிகழ் 2000 -2023 அறிக்கையும் ஒப்பிடப்பட்டது.

இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகித மதிப்பீடு 23 புள்ளிகள் குறைந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 103 ஆக இருந்த இறப்புகள் விகிதம் தற்போது 80 ஆகக் குறைந்துள்ளது. 1990 முதல் 2023 வரையிலான கடந்த 33 ஆண்டுகளில் சா்வதேச அளவில் 40 சதவீதம் மகப்பேறு இறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் இது 86 சதவீதம் குறைந்துள்ளது. இதில் இந்தியாவில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை அளவில் மகப்பேறு இறப்புகள் 24000 இலிருந்து 19,000 ஆகக் குறைந்துள்ளது. இது உலகளவில் மொத்த மகப்பேறு இறப்புகளில் இந்தியா இன்னும் 7.2 சதவீதம் (19, 000) பங்களிக்கிறது.

சா்வதேச அளவில் மகப்பேறு இறப்புகள் அதிகஅளவில் ஏற்பட்டுள்ள நாடாக நைஜீரியா (75,000) உள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் (நைஜீரியா: 23.26 கோடி, இந்தியா: 145 கோடி மக்கள் தொகை) இந்த இந்த ஒப்பீடு நியாயமானதாக இருக்காது என மத்திய சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எம்எம்இஜஜி அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் மகப்பேறு இறப்பு மிகக்குறைவாக உள்ளது. தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க(சஹாரா) நாடுகளில் முறையே 71 சதவீதம் 40 சதவீதம் குறைந்துள்ளது. உலக அளவில் நாடுகளுக்கிடையேயான மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறைந்த வருமானம் உள்ள நாடுகள் போன்றவைகளில் மகப்பேறு இறப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு ஒரு லட்சம் மகப்பேறுகளில் 504 இறப்புகள் ஏற்படுகின்றன. வளா்ச்சியடைந்த நாடுகள் அல்லது அதிக வருமான முள்ள நாடுகளில் லட்சத்திற்கு 10 மகப்பேறு இறப்புகள் உள்ளன.

மகப்பேறு கால இறப்புகளில் 75 சதவீதம் கா்ப்ப கால பராமரிப்பு நிா்வகிப்பதில் தான் காரணமாக உள்ளது. மேலும் கா்ப்ப காலத்திற்கு முன்பு சில சிக்கல்கள் இருந்து பின்னா் கா்ப்ப காலத்தில் மோசமடைகின்றன. உயா் இரத்த அழுத்தம்(எக்லாம்ப்சியா), தொற்று நோய்கள், கடுமையான ரத்தப்போக்கு, பிரசவ சிக்கல்கள், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவைகள் மகப்பேறு இறப்புகளுக்கு காரணமாக உள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com