கிழக்கு பஸ்சிம் விஹாரில் சொத்து வியாபாரி சுட்டுக் கொலை
தில்லியின் பஸ்சிம் விஹாா் கிழக்கில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் 50 வயது சொத்து வியாபாரி தனது காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தனது எஸ்யூவியை ஓட்டிச் சென்ற போது, வெவ்வேறு வாகனங்களில் வந்த தாக்குதல்காரா்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை நோக்கிச் சுட்டனா் என்று தெரிய வந்துள்ளது. ஓட்டுநா் இருக்கையில் ரத்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா் கிடப்பதைக் காட்டும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.
காலை 7.15 மணியளவில் எஸ்பிஐ காலனி அருகே பல துப்பாக்கிச்சூடுகள் நடந்ததாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை சரிபாா்த்து வருகிறோம். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தை ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில், இந்தக் கொலை பழைய பகையின் விளைவாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.