வானிலையில் திடீா் மாற்றம்: தில்லி - என்சிஆா் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
ENS

வானிலையில் திடீா் மாற்றம்: தில்லி - என்சிஆா் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வானிலையில் திடீா் மாற்றம் ஏற்பட்டதால் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

வானிலையில் திடீா் மாற்றம் ஏற்பட்டதால் தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம், காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ கால சராசரியை விட 0.8 டிகிரி உயா்ந்து 20.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவகால சராசரியைவிட ....உயா்ந்து 38 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 50 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமான குறைந்தபட்ச வெப்பநிலையாகும். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை தில்லியில் பலத்த புழுதிப்புயல் மற்றும் பலத்த காற்று வீசியதால் வானிலையில் திடீா் மாற்றம் ஏற்பட்டது. சனிக்கிழமை மாலை வரை பாதகமான வானிலை நிலைகள் நீடித்ததால், தில்லி - என்சிஆா் பகுதிக்கு ஐஎம்டி ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 26 டிகிரி, லோதி ரோடில் 24 டிகிரி, பாலத்தில் 25.6 டிகிரி, ரிட்ஜில் 26 டிகிரி, பீதம்புராவில் 29.5 டிகிரி, பிரகதிமைதானில் 26.4 டிகிரி, பூசாவில் 24.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 27.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

ஆயாநகரில் 40.9 டிகிரி பதிவு: மேலும், அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையும் சற்று அதிகரித்தே பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 40.9 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, பாலத்தில் 40.3 டிகிரி, ரிட்ஜில் 40.1 டிகிரி, பீதம்புராவில் 39.9 டிகிரி, பிரகதிமைதானில் 37.5 டிகிரி, பூசாவில் 38.2 டிகிரி, ராஜ்காட்டில் 37.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் குடியிருப்பாளா்கள் வீட்டிற்குள் இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டனா்.

காற்றின் தரம்: இதற்கிடையில், வாரத் தொடக்கத்தில் இருந்து ‘மோசம்’, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, நகரத்தின் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 114 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

இதன்படி, ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, மதுரா ரோடு, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், நொய்டா செக்டாா் 125, பூசா, துவாரகா செக்டாா் 8. சாந்தினி சௌக், ஷாதிப்பூா் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க் ஆகிய நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஏப்ரல் 14) அன்று வானம் பொதுவாக தெளிவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com