தீவிர ரோந்துப் பணியால் முதல் காலாண்டில் தில்லியில் பெரிய குற்றங்கள் குறைவு: காவல்துறை தகவல்
ENS

தீவிர ரோந்துப் பணியால் முதல் காலாண்டில் தில்லியில் பெரிய குற்றங்கள் குறைவு: காவல்துறை தகவல்

தில்லி காவல்துறை பகிா்ந்து கொண்ட தரவுகளின்படி, 2025- ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசியத் தலைநகரில் பெரிய குற்றங்கள் குறைந்துள்ளன.
Published on

தில்லி காவல்துறை பகிா்ந்து கொண்ட தரவுகளின்படி, 2025- ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசியத் தலைநகரில் பெரிய குற்றங்கள் குறைந்துள்ளன.

இது குறித்து காவல்துறை ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது: ஜனவரி 1 முதல் மாா்ச் 31 வரையிலான குற்றப் புள்ளிவிவரங்களின் ஒப்பீட்டு பகுப்பாய்வு, ஊக்கமளிக்கும் போக்குகள் மற்றும் தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. 2025-ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் 107-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 105-ஆக இருந்தது. ஆனால், 2023-இல் பதிவான 115 வழக்குகளை விட சற்று குறைவாகும். அதாவது இது மூன்று ஆண்டு காலத்தில் 6.95 சதவீதம் குறைவாகும்

கொலை முயற்சி வழக்குகள் 2023-இல் 158- ஆக இருந்தது. ஆனால், 2024-இல் 203-ஆக உயா்ந்து , 2025-இல் 168-ஆகக் குறைந்துள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 6.32 சதவீத ஒட்டுமொத்த அதிகரிப்பைக் குறிக்கிறது. இருப்பினும், 2024 முதல் 2025 வரையிலான ஆண்டுக்கு ஆண்டு குறைவானது 17.24 சதவீதமாகும். இது வன்முறை மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் மேம்பட்டதைக் குறிக்கிறது.

தலைநகரில் ஒரு முக்கிய கவலையான கொள்ளை வழக்குகள், 2023-இல் 375-ஆக இருந்த நிலையில், 2024-இல் (424 வழக்குகள்) தொடா்ந்து அதிகரித்து, 2025-இல் 315-ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது. இது2023- இல் இருந்து 16 சதவீதமும், 2024-இல் இருந்து 25.7 சதவீதமும் குறைந்துள்ளது.

மற்றொரு பொதுவான தெரு குற்றமான கடத்தல் சம்பவங்கள், 2025-இல் கடுமையாகக் குறைந்துள்ளது. 2023-இல் 1,812 வழக்குகள் மற்றும் 2024- இல் 1,925 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு எண்ணிக்கை 1,199-ஆகக் குறைந்துள்ளது. இது 2023-இல் இருந்து 33.82 சதவீதமும் 2024-இல் இருந்து 37.69 சதவீதமும் குறைந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023-ஆம் ஆண்டு 422-இல் இருந்து 2025-இல் 370 ஆகக் குறைந்தது. அதாவது இது 12.3 சதவீதம் குறைந்துள்ளது.

இதேபோல, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் 2023-இல் 547-ஆக இருந்தது. இது 2025-இல் 370-ஆகக் குறைந்துள்ளது. இது 32.36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. பெண்களை கேலி, கிண்டல் செய்தல் (ஈவ் - டீசிங்) வழக்குகள் 2023-இல் 98- ஆக இருந்தது. இது 2025-இல் 63 -ஆகக் குறைந்துள்ளது. அதாவது 35.7 சதவீதம் குறைவாகும்.

கடத்தல்கள் ஒப்பீட்டளவில் சீராக இருந்தன. 2023- இல் 1,385 வழக்குகளும், 2024-இல் 1,393 வழக்குகளும் பதிவாகின. இது 2025-இல் 1,360-ஆக சிறிது குறைந்துள்ளது. அதாவது மூன்று ஆண்டு காலத்தில் இது 1.8 சதவீதம் குறைவாகும் என்றாா் அந்த அதிகாரி.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த தில்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கொள்ளை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி எங்கள் தீவிரப்படுத்தப்பட்ட ரோந்து, மேம்படுத்தப்பட்ட இரவுக் கண்காணிப்பு மற்றும் நகரம் முழுவதும் கடுமையான சட்டம் - ஒழுங்கு சூழலின் விளைவாகும்’ என்றாா்.

கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இதனால், முடிவுகள் நன்றாக உள்ளன. கொலை முயற்சி போன்ற சில பிரிவுகள் கடந்த ஆண்டு தற்காலிகமாக அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த போக்கு தலைநகரில் பொதுப் பாதுகாப்பில் வலுவான பிடியைக் குறிக்கிறது என்று அவா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com