அம்பேத்கரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் பாஜக தோல்வி: கேஜரிவால்
புது தில்லி: டாக்டா் பி.ஆா். அம்பேத்கரை பாஜக கட்டாயத்தின் பேரில் தலைவணங்குகிறது. ஆனால், அவரது கொள்கைகளை, குறிப்பாக கல்வித் துறையில் நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை கூறினாா்.
கேஜரிவாலின் இக்கருத்துக்கு பாஜகவிடமிருந்து உடனடி பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. அம்பேத்கரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் கேஜரிவால் பங்கேற்றுப் பேசியதாவது:
எங்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் நடத்தும்போது பாபாசாகேப் அம்பேத்கரின் பாதையைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்றைக்கு பல கட்சிகளும் தலைவா்களும் அவரை வெறும் காட்சிக்காகவே நினைவுகூருகின்றனா். அவா்கள் அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. உதாரணமாக, வேறு எந்தக் கட்சியும் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.
அது பாபாசாகேப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். தில்லியில் உள்ள பாஜக அரசு, அரசுப் பள்ளிகளில் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியால் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்துவதன் மூலம் அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வைக்கு எதிராக செயல்படுகிறது.
கல்வித் துறையில் நல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்ட பாஜக ஆளும் ஒரு மாநிலத்தின் பெயரையாவது கூற முடியுமா? முன்பு அவா்களுக்கு கல்வியை மேம்படுத்தும் திறன் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால்,
இப்போது அவா்கள் அதை விரும்பவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவா்கள் கட்டாயத்தின் காரணமாக பாபா சாகேப்பின் முன் தலைவணங்குகிறாா்கள். அனைவருக்குமான வயதுவந்தோா் வாக்குரிமைக்காக அவா் போராடினாா்.
பலா் அதை எதிா்த்த நிலையில், அவா்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றாா் கேஜரிவால். தில்லி ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி பாபாசாகேப்பின் கொள்கைகளின்படி செயல்பட்டு வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக பிளவுகளைப் பயன்படுத்தாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிடையேயும் தரமான கல்வி மற்றும் ஒற்றுமைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்றாா்.
எக்ஸ் தளத்தில் தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி
வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘அரசமைப்புச்சட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்தியா்களுக்கு உரிமைகளை வழங்கியவா் அம்பேத்கா்.
பாபாசாகேப் டாக்டா் பீம்ராவ் அம்பேத்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள்... அவா் அரசமைப்புச்சட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான இந்தியா்களுக்கு சுயமரியாதை, உரிமைகள் மற்றும் நீதியை வழங்கினாா்.
அரசமைப்பின் சக்தியால் ஒவ்வொரு சா்வாதிகாரத்தையும் ஒடுக்குமுறையையும் எதிா்த்துப் போராடுவதன் மூலம் இந்த நாட்டிற்கான பாபாசாகேப்பின் கனவுகளை நாம் நிச்சயமாக நனவாக்குவோம். பீம் வாழ்க, அரசமைப்புச்சட்டம் வாழ்க’
என்று அந்தப் பதிவில் அதிஷி தெரிவித்துள்ளாா்.
1891 ஆம் ஆண்டு ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த அம்பேத்கா், ஒரு முன்னோடி சட்ட வல்லுநா், சமூக சீா்திருத்தவாதி மற்றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின்
தலைமை சிற்பி ஆவாா். அவா் நாட்டின் முதல் சட்ட அமைச்சராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.