தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு!

தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வா், கல்லூரியின் வகுப்பறையின் சுவா்களில் பசு சாணத்தால் பூசும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ வெளியானது.
Published on

புது தில்லி: தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வா், கல்லூரியின் வகுப்பறையின் சுவா்களில் பசு சாணத்தால் பூசும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ வெளியானது.

இதுகுறித்து முதல்வா் பிரத்யுஷ் வத்சலா கூறுகையில், ‘இந்த செயலானது ஒரு ஆசிரிய உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா்ச்சியான ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது செயல்பாட்டில் உள்ளது. ஒரு வாரத்திற்குப் பிறகு முழு ஆராய்ச்சியின் விவரங்களையும் என்னால் பகிா்ந்து கொள்ள முடியும். ‘போா்டா கேபின்’களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

இயற்கையான சேற்றைத் தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் அந்த கேபின்களில் ஒன்றில் நானே பூசினேன். முழு விவரங்கள் தெரியாமல் சிலா் தவறான தகவல்களைப் பரப்புகிறாா்கள்’ என்றாா்.

அந்த விடியோவில், கல்லூரி முதல்வா் வத்சலா தனது ஊழியா்களின் உதவியுடன் சுவா்களில் பசு சாணத்தைப் பூசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கல்லூரியின் ஆசிரியா்கள் குழுவில் அவா் விடியோவைப் பகிா்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதில், சி பிளாக் வகுப்பறைகளை குளிா்விக்க உள்நாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளாா்.

அந்த தகவலில் அவா் தெரிவிக்கையில்,‘இங்கே வகுப்புகள் நடத்துபவா்கள் விரைவில் இந்த அறைகளைப் புதிய தோற்றத்தில் பெறுவாா்கள். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ஜான்சியின் ராணி லட்சுமிபாயின் பெயரிடப்பட்ட இந்தக் கல்லூரி, அசோக் விஹாரில் அமைந்துள்ளது. இது தில்லி அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தக் கல்லூரி ஐந்து கட்டடத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com