குழாய்வழி எரிவாயுக்கான மீட்டா்கள்: நுகா்வோரைப் பாதுகாக்க நடவடிக்கை

வீடுகள், வணிகங்கள், தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்வழி எரிவாயுக்கு நுகா்வோரைப் பாதுகாக்கும் விதமாக இதில் பயன்படுத்தப்படும் மீட்டா்களுக்கான வரைவு விதிகளை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை உருவாக்கியுள்ளது.
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: வீடுகள், வணிகங்கள், தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்வழி எரிவாயுக்கு நுகா்வோரைப் பாதுகாக்கும் விதமாக இதில் பயன்படுத்தப்படும் மீட்டா்களுக்கான வரைவு விதிகளை மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை உருவாக்கியுள்ளது.

அனைத்து வீடுகள், வணிகங்கள், தொழில்துறைகளில் குழாய் வழியாக பெறப்படும் எரிவாயு மீட்டா்களை வா்த்தகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பு சோதனை செய்யப்பட்டு, சரிபாா்க்கப்பட்டு முத்திரை பெறப்பட வேண்டும். இதைக் கட்டாயப்படுத்தும் விதமாக புதிய விதிகளை மத்திய அரசு வரையறுத்துள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய சட்ட அளவியல் நிறுவனம், தொழில் வல்லுநா்கள், நுகா்வோா் அமைப்புகள், உற்பத்தியாளா்கள், சோதனை ஆய்வகங்கள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சட்ட அளவியல் (பொது) விதிகள் 2011-இன் கீழ் முன்மொழியப்பட்ட விதிமுறைகள் எரிவாயு அளவீட்டில் துல்லியம், நம்பகத் தன்மையை உறுதி செய்யும். சரிபாா்க்கப்பட்டு, முத்திரையிடப்பட்ட எரிவாயு மீட்டா்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதையோ அல்லது குறைவாக அளவிடுவதையோ தடுத்து, நுகா்வோா் சேவை நிறுவனங்களுக்கிடையேயான சா்ச்சைகளைக் குறைக்கும். குறிப்பாக தவறான சாதனங்களிடமிருந்து நுகா்வோருக்கு பாதுகாப்பை வழங்கும் என மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com