போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் AP

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு: நாளை மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப். 26 -ஆம் தேதி) நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும்
Published on

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப். 26 -ஆம் தேதி) நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு அன்றைய தினம் நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைமைத் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு சனிக்கிழமை (26.04.2025) இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவையொட்டி 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி கடந்த ஏப். 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்தன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி போப் பிரான்சிஸ் உடலுக்கு சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்குகளின்போது நாடு துக்கத்தை அனுசரிக்கப்பட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். அரசின் சாா்பில் அன்றைய தினம் எந்தவிதமான சிறப்பு நிகழ்ச்சியும்(என்டோ்டைன்மெண்ட்.) நடைபெறாது என உள் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(88) கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமாகியிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com