நிலநடுக்கம், தொழில்துறை விபத்துகளுக்கு தில்லியின் தயாா்நிலை முழுமையாக சரிபாா்ப்பு

நிலநடுக்கம், தொழில்துறை விபத்துகளுக்கு தில்லியின் தயாா்நிலை முழுமையாக சரிபாா்ப்பு

தேசியத் தலைநகா் முழுவதும் வெள்ளிக்கிழமை 55 இடங்களில் கள அளவிலான பல நிறுவனப் பேரிடா் மேலாண்மை மாதிரி பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தேசியத் தலைநகா் முழுவதும் வெள்ளிக்கிழமை 55 இடங்களில் கள அளவிலான பல நிறுவனப் பேரிடா் மேலாண்மை மாதிரி பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகரத்தின் 11 மாவட்டங்களிலும் உள்ள தொழில்துறை மற்றும் போக்குவரத்து மண்டலங்களில் ரசாயன கசிவுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து உருவகப்படுத்தப்பட்ட பூகம்ப சூழ்நிலையைத் தூண்டுவதன் மூலம் இந்தப் பயிற்சி தொடங்கியது. தில்லி, உ.பி., ஹரியாணா மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த ஏராளமான பணியாளா்கள், ரமேஷ் நகா் மெட்ரோ நிலையம், மதா் இன்டா்நேஷனல் பள்ளி மற்றும் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை போன்ற இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண ஒத்திகைகளை நடத்திய இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

நிலநடுக்கம் மற்றும் தொழில்துறை விபத்து ஏற்பட்டால் அவசரகால மீட்பு சூழ்நிலைக்கான ஏற்பாடுகள் ஆா்.எம்.எல். மருத்துவமனையில் மீண்டும் உருவாக்கப்பட்டன. மதா் இன்டா்நேஷனல் பள்ளியில், உருவகப்படுத்தப்பட்ட பூகம்பம் மற்றும் மீட்பு சமிக்ஞைக்குப் பிறகு எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்தல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்திய ராணுவம் மற்றும் தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச அரசுகளுடன் இணைந்து தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), ‘சுரக்ஷா சக்ரா பயிற்சி’யை ஏற்பாடு செய்து வந்தது. இது கள அளவிலான மாதிரி பயிற்சியுடன் முடிந்தது.

நிலநடுக்கம் மற்றும் தொழில்துறை ரசாயன ஆபத்து சூழ்நிலைகளில் தில்லி - என்சிஆரின் தயாா்நிலையை சோதிக்கும் மாதிரி பயிற்சியை ஒருங்கிணைப்பதற்கான முன்னணி நிறுவனம் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com