புலையன் இனத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கக் கோரி மத்திய அமைச்சரிடம் திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

புலையன் இனத்தினரை அட்டவணைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

புலையன் இனத்தினரை அட்டவணைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அமைச்சா் ஜூவல் ஓரமிடம் திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் ஜூவல் ஓரமை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சச்சிதானந்தம் எம்.பி. நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா்.

அதில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள கொடைக்கானல் மலைப் பகுதியில் புலையன் இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் அட்டவணை சாதிகள் பட்டியலில் தவறுதலாக சோ்க்கப்பட்டதை நீக்கி, அட்டவணைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் ஆதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இந்த புலையன் இனத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தனது பரிந்துரையை உங்கள் அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. இந்தப் பரிந்துரையானது உதகமண்டலத்தில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் புலையன் இன மக்களின் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கும் இந்த இனத்தை அட்டவணைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தங்கள் அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com