ஜூலை மாதத்தில் யமுனை நதியின் நீரின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) தெரிவித்துள்ளதாகவும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது முக்கிய மாசு குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா சனிக்கிழமை தெரிவித்தாா்.
யமுனை சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ் தில்லி அரசின் தொடா் முயற்சிகள்தான் இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்றும் சிா்சா கூறினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த மேம்பாடுகள் தற்செயலானவை அல்லது பருவகாலமானவை அல்ல. அவை திட்டமிடப்பட்ட மற்றும் நீடித்த மனித முயற்சியின் விளைவாகும்.
யமுனை சுத்திகரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல், வடிகால்களை இடைமறித்தல் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் ஆற்றில் நுழைவதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அமைச்சா்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘பல்லா, வஜிராபாத், ஐஎஸ்பிடி பாலம், ஐடிஓ பாலம், நிஜாமுதீன் பாலம் மற்றும் ஓக்லா தடுப்பணை உள்ளிட்ட எட்டு கண்காணிப்பு இடங்களிலிருந்து நீா் மாதிரிகளை டிபிசிசி சேகரித்தது.
அறிக்கையின்படி, கரிம மாசுபாட்டின் முக்கிய அளவீடான உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) கடுமையாகக் குறைந்திருந்தது.
ஐடிஓ பாலத்தில், ஜூன் மாதத்தில் 70 எம்ஜி/1 ஆக இருந்த பிஓடி அளவுகள் ஜூலையில் 20 எம்ஜி/1 ஆகக் குறைந்தது. ஓக்லா தடுப்பணையில், இது 46 எம்ஜி/1இல் இருந்து 8 எம்ஜி/1 ஆகக் குறைந்தது.
மற்றொரு முக்கியமான மாசு குறிகாட்டியான வேதியியல் ஆக்ஸிஜன் தேவையும் (சிஓடி) முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. ஐடிஓ பாலத்தில் சிஓடி 186 எம்ஜி/1இல் இருந்து 54 எம்ஜி/1 ஆகவும், ஓக்லா தடுப்பணையில் 100 எம்ஜி-1-இல் இருந்து 30 எம்ஜி/1 ஆகவும் குறைந்திருந்தது.
ஜூன் மாதத்தில் ஆற்றின் சில பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த கரைந்த ஆக்ஸிஜன் (டிஓ) அளவுகள், பல்லா மற்றும் வஜிராபாத் போன்ற இடங்களில் கணிசமாக அதிகரித்தன. இது சிறந்த ஆக்ஸிஜனேற்றத்தைக் குறிக்கிறது என்று அந் த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.