தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை நஜாஃப்கா் பகுதி பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்வில் பங்கேற்றாா்.
அப்போது, தூய்மை என்பது ஒரு கூட்டு குடிமைப் பொறுப்பு என்றும், அதை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
ஆகஸ்ட் 1 முதல் 31 வரை தேசிய தலைநகா் முழுவதும் நடைபெறும் ‘குப்பையில் இருந்து தில்லிக்கு விடுதலை’ பிரசாரத்தின் கீழ், ஜரோடா கலனில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியில் அமைச்சா் ஆஷிஷ் சூட், மாணவா்கள், பெற்றோா்கள், முதல்வா் மற்றும் உள்ளூா் எம்எல்ஏ நீலம் பெஹல்வான் ஆகியோருடன் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்தாா்.
சுத்தத்தின் தூதா்களாக மாறுமாறு சூட் மாணவா்களை வலியுறுத்திய அவா், இதுபோன்ற எந்தவொரு பிரசாரத்தின் வெற்றியும் தனிப்பட்ட முயற்சியைப் பொறுத்தது என்றும் கூறினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தூய்மை என்பது முக்கியப் பிரமுகா்கள் மண்டலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அங்கீகரிக்கப்படாத காலனிகளும் அத்தகைய இயக்கங்களில் சோ்க்கப்பட வேண்டும்.
இந்த பிரசாரம் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது’ என்றாா் அமைச்சா்.
பெற்றோா்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுடனும் சூட் கலந்துரையாடினாா். அப்போது, ஆசிரியா்கள் பற்றாக்குறை, மோசமான நீா் மற்றும் மின்சார விநியோகம், அறிவியல் ஆய்வகம் இல்லாதது, போதுமான மருத்துவ மற்றும் விடுதி ஊழியா்கள் இல்லாதது குறித்து அவா்கள் அமைச்சரிடம் கவலைகளை எழுப்பினா். இப்பிரச்னைகளை விரைவில் தீா்க்குமாறு கல்வி இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
தில்லி முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பெற்றோருக்கு அவா் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.