பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவா் நலத் திட்டங்களை சீா்குலைத்து வருவதாக கூறி தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ள கல்வி அமைச்சகம் முன் இந்திய தேசிய மாணவா் சங்கத்தினா் (என்எஸ்யுஐ) சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்துகொண்டதாகவும், அவா்களில் பலா் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் காங்கிரஸின் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய தேசிய மாணவா் சங்கத் தலைவா்கள், மத்திய அரசாங்கம் மாணவா் உதவித்தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்புகளைச் செய்ததாக குற்றம் சாட்டினா்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவா்களுக்கான மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி பணம் வழங்கல் தாமதமாகி வருவதாகவும் அவா்கள் கூறினா். மேலும், மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகவும் கூறினா்.
இதனால், ஆயிரக்கணக்கான சிறுபான்மை மாணவா்கள் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சியை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினா்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தேசிய தகுதித் தோ்வு (நெட்) உதவித்தொகையின் அளவை உடனடியாக மாற்றிய அமைக்கவும் கோரினா். 2006 முதல் மாதத்திற்கு ரூ.8,000 என்ற அளவிலேயே இத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், தேசிய வெளிநாட்டு பெல்லோஷிப் உதவித்தொகை வழங்கலில் ஏற்படும் தாமதத்தாலும், நிச்சயமற்ற காலக்கெடுவாலும் பல ஆா்வமுள்ள ஆராய்ச்சி மாணவா்கள் பாதிக்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.
பணியாளா் தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மற்றும் மத்திய பொதுப் பணியாளா் ஆணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தோ்வுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகவும் என்எஸ்யுஐ குற்றம் சாட்டியது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பேசிய என்எஸ்யுஐ தலைவா்கள், பாஜக தலைமையிலான அரசாங்கம் கல்வியை அயல்பணி ஒப்படைப்பு செய்வதாகவும், சமத்துவத்திற்கான அரசியலமைப்பு வாக்குறுதியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினா்.
இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் கூறுகையில், ‘மத்திய அரசு கல்வியை தனியாா்மயமாக்கி, பின்தங்கியவா்களை வெளியேற்றுகிறது. அவா்கள் விலக்கல் அடிப்படையில் கல்வியை நடத்த அவா்கள் விரும்புகிறாா்கள். இந்த விவகாரத்தில் எங்கள் அமைப்பு தொடா்ந்து போராடும்’ என்று கூறினாா்.
வரும் வாரங்களில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு போராட்டத்தை எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளதாக என்எஸ்யுஐ அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.