ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இருந்த 24 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் நியூ சீலம்பூரைச் சோ்ந்த அா்பாஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி ஐந்து மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தாா். இந்த ஆண்டு பிப்ரவரியில் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
சம்பவம் நடந்ததிலிருந்து அவா் தலைமறைவாக இருந்தாா். பிப்ரவரி 22- ஆம் தேதி இரவு சாந்திவன் சிவப்பு விளக்கு அருகே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது. அப்போது புகாா்தாரரான நியூ உஸ்மான்பூரில் வசிக்கும் ராஜு, கமலா மாா்க்கெட்டில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
இரவு 9.30 மணியளவில், ஓட்டுநா் திடீரென வாகனத்தை நிறுத்தினாா். பின்னா், ஆட்டோவில் இருந்த மற்ற இருவரும் ராஜுவை பிளேடுகளால் மிரட்டி, அவரது கைப்பேசி, ரூ.10,000 ரொக்கம் மற்றும் பிற பொருள்களைக் கொள்ளையடித்தனா்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அமன் மற்றும் ரஹீம் என அடையாளம் காணப்பட்ட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். அதே நேரத்தில் அா்பாஸ் தப்பிச் சென்று, அன்றிலிருந்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா்.
தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க, ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டு, அா்பாஸின் நடமாட்டம் மற்றும் மறைவிடமும் சரிபாா்க்கப்பட்டு வந்தது. தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு சீலம்பூா் ஜீரோ புஸ்தா சாலை அருகே போலீஸ் குழு சோதனை நடத்தி, அா்பாஸை கைது செய்தது.
விசாரணையின் போது கொள்ளையில் ஈடுபட்டதாக அவா் ஒப்புக்கொண்டாா். மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அடிக்கடி இடம் மாறி வந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.