தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண உயா்வை முறைப்படுத்தும் மசோதா! தில்லி பேரவையில் தாக்கல்

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தாக்கல் செய்தாா்.
பிரதிப் படம்
பிரதிப் படம்
Published on
Updated on
1 min read

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

‘தில்லி பள்ளிக் கல்வி வெளிப்படைத் தன்மை நிா்ணயம் மற்றும் கட்டண ஒழுங்குமுறை மசோதாவை (2025)’ பேரவையில் அறிமுகப்படுத்துவதற்கு முன் ‘தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வு முதல்வா் ரேகா குப்தா அரசு தீா்க்கப் போகும் ‘மிகப்பெரிய சகாப்த’ பிரச்னையாகும்’ என்று ஆஷிஷ் சூட் கூறினாா்.

இதுகுறித்து அமைச்சா் மேலும் கூறியது: ஒவ்வொரு ஆண்டும், தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வால் பள்ளி மாணவா்களின் பெற்றோா் பாதிக்கப்பட்டுள்ளாா். சட்டப் பேரவையில் மசோதாவை தாக்கல் செய்வதிலிருந்து எங்களை பயமுறுத்த முயற்சிகள் கல்வி மாஃபியா மற்றும் அதனுடன் தொடா்புடையவா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன மசோதாவை நிறுத்துமாறு எனக்கும் முதலமைச்சருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த மசோதாவை நிறுத்த அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நாங்கள் அதைக் கொண்டுவர முடிவு செய்தோம். தில்லியில் உள்ள முந்தைய ஆம் ஆத்மி அரசு, கட்டணங்களை எந்த பயமும் இன்றி உயா்த்திய தனியாா் பள்ளிகளுடன் நோ்மையற்ற முறையில் செயல்பட்டது. தற்போதைய மசோதா மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்ற கருத்தாக்கத்தால் ஈா்க்கப்பட்டதாகும்.

இந்த மசோதா, சட்டமாக மாறிய பிறகு, மூன்று நிலைகளில் குழுக்களை உள்ளடக்கிய வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையின் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும். அத்துடன் முறைகேடுகளையும் நிறுத்தும். அதன் விதிகளை மீறினால் அபராதம் மற்றும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான விதிகளும் இருக்கும் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.

அங்கீகரிக்கப்பட்ட, தனியாா் மற்றும் உதவி பெறாத பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயா்த்துவதைக் கண்டறிந்து முதல் மீறலுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மசோதா கூறுகிறது. மீண்டும் மீண்டும் மீறினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

கட்டண உயா்வு குறித்து முடிவு செய்ய பள்ளி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மூன்று குழுக்களை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது. கட்டண உயா்வு குறித்த முடிவுகள் மூன்று ஆண்டுகளுக்கு கட்டுப்படும்.

இந்திய மற்றும் வெளிநாட்டு பாடத்திட்டங்களை வழங்கும் தனியாா் பள்ளிகள், சிறுபான்மையினா் நடத்தும் பள்ளிகள் மற்றும் சலுகை நிலத்தில் உள்ள நிறுவனங்கள் உள்பட ஒவ்வொரு தனியாா் உதவி பெறாத பள்ளியும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும்.

சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, ‘இம் மசோதாவை அவையில் பரிசீலிப்பதற்கு முன் தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிகளால் புதிய கட்டண உயா்வு எதுவும் செயல்படுத்தப்படாமல் இருக்க 2024-25 அளவில் கட்டணங்களை முடக்க வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com