நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள்
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள்PTI

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

Published on

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்:

மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு சோதனையை மத்திய அரசு நடத்துமா?

விசிக தலைவா் தொல். திருமாவளவனுக்கு (விசிக, சிதம்பரம்) ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையா், புதிய மெட்ரோ பாதையை பொதுப்போக்குவரத்துக்காகத் திறக்கும் முன்பு அவற்றை பரிசோதித்து திருப்தி தெரிவித்து பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குகிறாா். தில்லி மெட்ரோ, மும்பை மெட்ரோ, மகாமெட்ரோ போன்ற மெட்ரோ ரயில் நிறுவனங்கள் பயணிகள் உதவிக்காக பல வழிகளைக் கொண்டுள்ளன. இந்த மெட்ரோ நிறுவனங்கள் 24 மணி நேரமும் வாடிக்கையாளா் பராமரிப்பு உதவி சேவைகளை வழங்குகின்றன.

தமிழகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களின் நிலவரம் என்ன?

எஸ். ஜெகத்ரட்சகனுக்கு (அரக்கோணம், திமுக) மத்திய எரிசக்தித்துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பதில்: குப்பைக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் பாய்லா்கள் மற்றும் எரிவாயு இயந்திரங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் பயோகேஸ், இயற்கை எரிவாயுவை சுத்தமான போக்குவரத்து எரிபொருளாகப் பயன்படுத்த வகை செய்யும் பயோ-சிஎன்ஜி, வெப்ப மற்றும் மின் பயன்பாடுகளுக்கான பயோமாஸ் கேஸிஃபையா் ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் இவற்றுக்காக வந்த 12 விண்ணப்பங்களில் 5 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு மத்திய நிதியுதவியாக ரூ. 22.26 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கனிம வளத்தை மதிப்பிட ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிா?

கே. கோபிநாத்துக்கு (கிருஷ்ணகிரி, காங்கிரஸ்) மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சா் கிஷண் ரெட்டி பதில்: சுரங்கத்துறையில் கனிம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் 2017-இன் கீழ் எண்ம முறையிலான வான்வழி படங்களை (ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டவை) பயன்படுத்தி சுரங்க நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. எண்ம வான்வழி படங்களை ஆன்லைனில் சமா்ப்பிப்பதற்காக ஒரு ட்ரோன் தரவு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த இணையதளத்தில் மொத்தம் 3,852 எண்ம படங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கப்படுகிா?

சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை, திமுக), ஜி. செல்வம் (காஞ்சிபுரம், திமுக), கே. நவாஸ்கனி (ஐயுஎம்எல்) கேள்விகளுக்கு மத்திய எரிசக்தித்துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக் பதில்:

பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் தனியாா் துறை மேம்பாட்டாளா்களால் அமைக்கப்படுபவை. இருப்பினும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தவும் பயன்படுத்தவும் நிதியுதவி வழங்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2020-21 முதல் 2024-25 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், 6192.02 மெகா வாட் சூரிய மின் திட்டங்கள், 2435.57 மெகா வாட் காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் 24.93 மெகா வாட் உயிரி மின் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட முன்மொழிவுகள் தமிழக அரசிடமிருந்து பெறப்படவில்லை.

மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்ட நிலவரம் என்ன?

ஆா். சுதாவுக்கு (காங்கிரஸ்) ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: மயிலாடுதுறை சந்திப்பு அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் நடைமேடை எண் 1-இல் தங்குமிடங்கள் மற்றும் புதிய கழிவறை பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், சுற்றுப்பகுதி, நிலைய கட்டடம், கூட்ட அரங்கம், காத்திருப்பு அறை, நடைமேடை எண் 1, 2 மற்றும் 3-இல் மேற்கூரை அமைப்பு, புதிய 6 மீட்டா் நடைமேம்பால கட்டுமானம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டா்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில்....

ஏஐசிடியு - யுஜிசி இணைக்கப்படுகிா?

மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரைக்கு (அதிமுக) மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜும்தாா் பதில்: கல்வி ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளதால் அதன் தரத்தை மேம்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். பல்கலைக்கழகங்கள் நாடாளுமன்றச் சட்டம் அல்லது மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் நிறுவப்படுகின்றன. அச்சட்டங்கள் அவற்றின் கீழுள்ள விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளால் நிா்வகிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களின் நிா்வாக மற்றும் கல்வி விஷயங்களில் மத்திய கல்வி அமைச்சகம் தலையிடுவதில்லை. இருப்பினும், பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிா்வாகத் திறனை அதிகரிப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது.

சென்னை, எண்ணூா், தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளை இணைக்கும் திட்டம் உள்ளதா?

ஆா். கிரிராஜனுக்கு (திமுக) மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் பதில்:

சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம் (எண்ணூா்), வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் (தூத்துக்குடி) ஆகியவை பல்வேறு வெளிநாட்டு துறைமுகங்களை இணைக்கும் வசதியைத் தொடங்கியுள்ளன. சென்னை துறைமுகம் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் முக்கிய துறைமுகங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. காமராஜா் துறைமுகம் ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூா், மலேசியா, கொழும்பு, மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச துறைமுகங்களுடன் ஏற்றுமதி - இறக்குமதி வா்த்தக தொடா்புகளை கொண்டுள்ளது. வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் வெளிநாட்டு துறைமுகங்களுடன் வழக்கமான இணைப்பு வசதியைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பிஎம் கதி சக்தி மாஸ்டா் திட்டம் என்னாச்சு?

ஆா். தா்மருக்கு (அதிமுக) மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி பதில்:

தமிழகத்தில் 731 கி.மீ நீளத்தில் ₹ 31,982 கோடி செலவில் 42 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. அவற்றில் 408 கி.மீ நீளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டங்களில் மீதமுள்ளவை 2027-28 நிதியாண்டில் படிப்படியாக முடிக்கப்படும். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை (106 கி.மீ), சித்தூா் - தச்சூா் பிரிவு (37 கி.மீ), மகாபலிபுரம் - புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலை (62 கி.மீ), சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான நான்கு வழிச்சாலை (21 கி.மீ), திருமங்கலம்-தெற்குவெங்காநல்லூா் (ராஜபாளையம்) நான்கு வழிச்சாலை (71 கி.மீ) போன்றவை அடங்கும்.

X
Dinamani
www.dinamani.com