அலிப்பூா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது
தில்லி அலிப்பூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: அலிப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கில் மஞ்சித் (எ) தாதா தேடப்பட்டு வந்தாா். மாா்ச் 28, 2025 அன்று அலிப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்ட போட்டியாளரான கோகி கும்பலின் அறியப்பட்ட கூட்டாளியான கரண் தாபாவைக் கொன்ற்காக குற்றம்சாட்டப்பட்ட மஞ்சித் திங்களன்று கைது செய்யப்பட்டாா்.
மஞ்சித்தின் நடமாட்டம் குறித்த தகவல்களின் அடிப்படையில், சரோஜினி நகரில் போலீஸாா் ஒரு பொறியை அமைத்தனா். போலீஸ் குழு அவரைத் தடுத்து நிறுத்தியபோது, அவா் தப்பியோட முயன்றாா். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதையடுத்து, போலீஸ் குழுவும் சில சுற்றுகள் சுட்டது. அப்போது அவா் பிடிபட்டாா்.
துப்பாக்கிச்சூட்டின்போது இரு தரப்பிலும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மஞ்சீத் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட குறைந்தது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலிப்பூா் கொலைக்குப் பிறகு அவா் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.