ஒப்பந்ததாரா்களாகக் காட்டிக் கொண்டு செப்பு கேபிள்களை திருடிய 5 போ் கைது
தெற்கு தில்லியின் சிஆா் பாா்க் மற்றும் சரிதா விஹாா் பகுதிகளில் ஒரு தொலைத்தொடா்பு நிறுவனத்தின் ஒப்பந்ததாரா்களாக காட்டிக் கொண்டு நிலத்தடி செப்பு கேபிள்களைத் திருடியதாக ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கவுதம் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் சமீா், அமித், ஆரிஃப், ஷகீல் மற்றும் அம்சாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் நிலத்திலிருந்து செப்பு கம்பியை எடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனா். திருடப்பட்ட சுமாா் சுமாா் 1,400 கிலோ செப்பு கம்பியுடன், ஒரு லாரி மற்றும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஐந்து பேரும் நகரம் முழுவதும் இதேபோன்ற ஒரு டஜன் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 28-ஆம் தேதி காலை, சிஆா் பாா்க் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கீகரிக்கப்படாத தோண்டுதல் நடந்து வருவதை போலீஸாா் கவனித்தபோது இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. சந்தேக நபா்களில் சிலா் தப்பியோடிய நிலையில், சமீா் மற்றும் அமித் கைது செய்யப்பட்டனா்.
ஆரம்ப விசாரணையின் போது, அவா்கள் ஒரு தொலைத்தொடா்பு நிறுவனத்தின் ஒப்பந்ததாரா்களாக பணிபுரிவதாகக் கூறினா். ஆனால், அவா்களின் பதில்கள் சந்தேகத்தை எழுப்பின. தொடா்ச்சியான விசாரணையில், அவா்கள் செப்பு கம்பி திருட்டில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதை ஒப்புக்கொண்டனா்.
இதையடுத்து, தொலைத்தொடா்பு அதிகாரி ஒருவா் பணியைச் சரிபாா்க்க அழைக்கப்பட்டாா். மேலும், அந்தப் பகுதியில் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் அவா் உறுதிப்படுத்தினாா். இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடா்ந்து ஆக.2- ஆம் தேதி மேலும் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் திருடப்பட்ட செப்பு கம்பியைப் பெற்ற ஆரிஃப் மற்றும் ஷகீல் மற்றும் அம்சாத் ஆகியோா் ஆவா். ஹிரியாணாவின் பிவானி மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு வழக்கில் ஆரிஃப் மற்றும் ஷகீல் ஆகியோா் முன்பு கைது செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையின் போது, அந்தக் கும்பல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவது தெரியவந்தது. அவா்கள் காஜியாபாத்தின் லோனியில் வசிக்கின்றனா். அதிகாலை நேரங்களில் திருட்டுகளை மேற்கொள்ள லாரிகள் மற்றும் ஜேசிபிகள் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி வந்தனா். குற்றவியல் கும்பலின் தலைமறைவான மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.