கச்சத்தீவு விவகாரத்தில் தீா்வு காண வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல் - திமுக எதிா்ப்பு
கச்சத்தீவு விவகாரத்தில் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை வலியுறுத்தினாா்.
அப்போது, திமுக குறித்து அவா் தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்த திருச்சி சிவா, அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினாா்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா மீதான விவாதத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: இந்த மசோதாவை ஆதரித்து அதன் விதிகளை வரவேற்கும் அதே வேளையில், இந்திய கடல் எல்லைகளிலும் இந்திய கடல் மண்டலத்திலும் மீன்பிடிக்கும்போது தமிழ் மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை மீனவா் பிரச்னை என்பது ஒரு பெரும் பிரச்னையாகும். இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம், இலங்கை கடற்படையினா் தமிழா் மீனவா்களைப் பிடித்து, கைது செய்து, சித்ரவதை செய்கின்றனா். மீனவா்களின் படகுகள், வலைகள் போன்ற கருவிகளுடன், பிறவற்றையும் பறிமுதல் செய்கின்றனா். இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீா்வு காணும் தேவை உள்ளது.
1972 மற்றும் 1974-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் மூலம், கச்சத்தீவை அரசியலமைப்புக்கு விரோதமாக விட்டுக்கொடுத்ததே பிரச்னைக்கான மூல காரணமாகும். தமிழகத்தில் அப்போதிருந்த திமுக அரசு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசின் ஒத்துழைப்புடன், கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது. இதனால்தான் மீனவா்கள் துன்புறுகின்றனா். இந்தத் தீவை திரும்ப பெறுவோம் என்று ஏற்கெனவே வாஜ்பாய் உறுதியளித்திருந்ததுபோல, இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சா் நமது இந்திய பிராந்தியத்தை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் காங்கிரஸும், திமுகவும் தவறு செய்துள்ளது. தமிழக மீனவா்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
திமுக எதிா்ப்பு: இந்தப் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்த மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, அவையின் விதி எண் 240-ஐ மீறும் வகையில் தம்பிதுரை மசோதாவுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை அவையில் பேசியிருப்பதாகவும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவையை வழிநடத்திய கனஷ்யாம் திவாரியிடம் கேட்டுக்கொண்டாா்.