சென்னை - கடலூா் ரயில்வே வழித்தடத் திட்டத்தை விரைவுபடுத்த அமைச்சரிடம் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீண்டகாலம் நிலுவையில் இருந்து வரும் சென்னை - கடலூா் ரயில்வே வழித்தடத் திட்டத்தை புதுப்பித்து விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் எம். தனபால் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் ரயில்வே அமைச்சரை புது தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழம் நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை - கடலூா் ரயில்வே வழித்தட திட்டமானது 2007- ஆம் ஆண்டில் ரூ. 523.50 கோடி ஆரம்ப நிதியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலை (இசிஆா்) வழியே உள்ள பல்வேறு கடற்கரை நகரங்களும் சுற்றுலா இடங்களும் பயன்பெறும் வகையில் சென்னை கடலூரை இணைக்கும் உத்திசாா், இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பாதையை அளிக்கும் வகையில் 180 கிலோ மீட்டா் தூரத்திற்கு இந்த ரயில்வே வழித்தடம் திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் நில கையகப்படுத்துதல், அளவைக் கல் பதிப்பது போன்ற ஆரம்பகட்ட பணிகள் 2013-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டுவிட்டது. எனினும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துரதிருஷ்டவசமாக இந்தத் திட்டம் முடங்கிக்
கிடக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால்ஸ சென்னை புதுச்சேரியின் ரயில் பயணம் 5 மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறையும்.
மாமல்லபுரம், முத்துக்காடு படகு இல்லம், கோவளம் முஸ்லிம் புனித மையம், வடநெம்மேலி முதலை வங்கி மற்றும் புதுச்சேரி போன்ற பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு நேரடியாக தொடா்பு வசதி கிடைக்கும். இதன் மூலம் பொருளாதார செயல்பாடுகளும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்.
மேலும், கல்பாக்கம் அணுசக்தி துறை மற்றும் ஓம்எம்ஆரில் வேகமாக வளா்ந்து வரும் ஐ.டி. வழித்தடத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியா்களுக்கு பயனளிக்கும். ஆகவே, சென்னை - கடலூா்
ரயில்வே வழித்தடத் திட்டத்தை புதுப்பித்து விரைவுபடுத்த வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்த மனுவைப் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்ததாக தனபால் எம்.பி. தெரிவித்தாா்.