குடிமைப் பிரச்னைகளைத் தீா்க்க காவல்துறை, வழக்குரைஞா்கள் சங்கம் இடையே ஆலோசனை

தில்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே கூட்டம்
Published on

ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முக்கிய குடிமைப் பிரச்னைகளைத் தீா்க்கவும், தில்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே கூட்டம் நடைபெற்ாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காவல் இணை ஆணையா் (மத்திய சரகம்) மதுா் வா்மா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கு, வாகன நிறுத்துமிட நெரிசல், ஆக்கிரமிப்பு மற்றும் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு தொடா்பான முக்கியப் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து மத்திய காவல் துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: நீதிமன்றத்தின் சுமுகமான செயல்பாட்டை நீண்ட காலமாக பாதித்து வரும் பாா்க்கிங் மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளைத் தீா்க்க பரஸ்பர புரிந்துணா்வை உருவாக்குவதும் ஆக்கபூா்வமான செயல் திட்டத்தை வகுப்பதும் இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

இந்தச் சந்திப்பு இரு தரப்பினருக்கும் இடையே திறந்த உரையாடலையும் அா்த்தமுள்ள கருத்து பரிமாற்றத்தையும் சாத்தியமாக்கியது.

அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தம், சட்டவிரோத சாலையோர கடைகள் மற்றும் நீதிமன்ற வாயில்களுக்கு அருகிலுள்ள நெரிசல் போன்ற முக்கியமான பிரச்னைகள் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன. ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள நிா்வாக மற்றும் பாதுகாப்பு சவால்களைத் தீா்ப்பதை விரைவுபடுத்தவும், மாதாந்திர கூட்டங்களை நடத்தவும், பயனுள்ள தகவல் தொடா்புகளைப் பராமரிக்கவும் இக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com