மங்களூா்- கோவை இன்டா்சிட்டி ரயில் போத்தனூரில் நின்று செல்ல வேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை
மங்களூா் - கோயம்புத்தூா் இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் ஆகியவை போத்தனூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி திமுக உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் வியாழக்கிழமை முன்வைத்த கோரிக்கை: போத்தனூா் முதல் திண்டுக்கல் வரையிலான மீட்டா் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி 2008-இல் தொடங்கப்பட்டு 2017-இல் நிறைவடைந்தது. இந்த ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டவுடன், மீட்டா் கேஜில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்களூா் - கோயம்புத்தூா் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ. எண் 22609/ 22610), எா்ணாகுளம் - காரைக்கால் (வ.எண் 16187 / 16188) எக்ஸ்பிரஸ் போத்தனூா் சந்திப்பில் நிறுத்தப்பட வேண்டும். இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் (வ.எண் 22651/22652) காலையிலும் மாலையிலும் மடத்துக்குளத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்று கோவை மக்கள் தொடா்ந்து கோரி வருகின்றனா். ஆகவே, பொதுமக்களின் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன் என அவா் வலியுறுத்தினாா்.