கீழடி அகழாய்வு தளத்திற்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

கீழடி அகழாய்வு தளத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக வலியுறுத்தியது.
Published on

கீழடி அகழாய்வு தளத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக வலியுறுத்தியது.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண்:377-இன் கீழ் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்செல்வன் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திற்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், இந்திய வரலாற்றின் வடக்கை மையப்படுத்திய கதையை சவால் செய்யும் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளன.

தமிழ் பிராமி கல்வெட்டுகள், நகா்ப்புற குடியேற்றத் திட்டமிடல், தொழில்துறை கைவினைத்திறன் மற்றும் வா்த்தக வலையமைப்புகள் வரை இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. அவை வைகை ஆற்றின் கரையில் அதிக கல்வியறிவு பெற்ற, குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த நகரமயமாக்கப்பட்ட நாகரிகத்தைக் குறிக்கின்றன.

இது தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் அதன் இலக்கிய கலாசாரத்தையும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் அகழாய்வுகள் போதுமான நிதி, தேசிய பாா்வை மற்றும் விரைவான அங்கீகாரத்தைப் பெறுவது போலவே, கீழடி திட்டத்திற்கும் போதுமான நிதியுடன் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

கீழடி தளத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்தை வழங்கி, அது உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் மற்றும் பாரம்பரிய வளாகமாக உருவாக்கப்படுவதை உறுதி செய்யவும், சா்வதேச ஒத்துழைப்புடன் அந்த இடத்தில் ஒரு பிரத்யேக கலாசார ஆராய்ச்சி மையத்தை நிறுவவும்

கீழடியை என்சிஇஆா்டி பாடப்புத்தகங்களிலும் பொது விவாதங்களிலும் முக்கிய இடம் பெறச் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அகல ரயில் பாதைத் திட்டம்

திண்டிவனம்-திருவண்ணாமலை அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் விதி எண்: 377-இன்கீழ் முன்வைத்த கோரிக்கையில், திண்டிவனம்-திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதை திட்ட திட்டத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு எதிராக நிதி குறைவாக நிதி விடுவிக்கப்படுகிறது.

மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டான ரூ.42.7 கோடிக்கு எதிராக, மொத்த செலவு ரூ.76.54 லட்சமாக உள்ளது. திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய அகல ரயில் பாதை திட்டத்தை சரியான நேரத்தில் முடிப்பதற்காக, திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, திட்டத்துடன் தொடா்புடைய அனைத்து நிறுவனங்களையும் அணுகி, திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com