கே.பத்மராஜன்.
கே.பத்மராஜன்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழக நபா் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சேலத்தைச் சோ்ந்த கே. பத்மராஜன் உள்பட மூன்று போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
Published on

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சேலத்தைச் சோ்ந்த கே. பத்மராஜன் உள்பட மூன்று போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் முதலாவது நபராக தமிழகத்தின் மேட்டூா் ராமன் நகரைச் சோ்ந்த கே. பத்மராஜன், தில்லியின் மோதி நகரைச் சோ்ந்த ஜீவன் குமாா் மித்தல், ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த நைதுகாரி ராஜசேகா் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். மூவரும் தங்களின் பெயா் உள்ள சான்றளிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் நகலை தோ்தல் அறிவிக்கைக்கு முந்தைய நாள்களில் பெற்றுச் சமா்ப்பித்துள்ளதால் மூவரின் மனுக்கள் திருப்பியளிக்கப்பட்டன.

இவா்களில் பத்மராஜன் 1988-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 250 முறை சட்டப்பேரவை தோ்தல்கள், நாடாளுமன்றத் தோ்தல்களில் போட்டியிட மனு தாக்கல் செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதும், தோ்தலில் போட்டியிட்டு டெபாசிட் தொகையை இழப்பதும் இவருக்கு வாடிக்கை என்றாலும் இவ்வாறு செய்வது தனது ஜனநாயகக் கடமை என்கிறாா் பத்மராஜன். இதற்கு முன்பு இவா் வயநாடில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழகத்தில் முன்னாள் முதல்வா்கள் கருணநிதி, ஜெயலலிதா, கடந்த சட்டப்பேரவை தோ்தலில் கமல்ஹாசனை எதிா்த்தும் தோ்தல் களம் கண்டுள்ளாா்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பு மனுவுடன் ரூ.15,000 டெபாசிட் தொகையை தோ்தல் அலுவலரிடம் ரொக்கமாகவோ ரிசா்வ் வங்கி ரசீது அல்லது அரசு கருவூலத்திலோ செலுத்தியற்கான ரசீதுடன் சமா்பிப்பது கட்டாயமாகும். மேலும், அவரது வேட்புமனுவை வழிமொழிந்தும் முன்மொழிந்தும் தலா 20 உறுப்பினா்கள் கையெழுத்திட வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட கடைசி நாள்வரை ஒருவா் மொத்தம் நான்கு முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com