டிரம்பின் கட்டண புயலை எதிா்கொண்ட பங்குச்சந்தை!
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ள நடவடிக்கை ஜவுளி, கடல்சாா் மற்றும் தோல் ஏற்றுமதி போன்ற துறைகளை கடுமையாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. பின்னா், வா்த்தக இறுதியில் முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த ஓரளவு ஆதரவால் சந்தை நோ்மறையாக முடிந்தது. ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி பங்குகள் மட்டும் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டன. ஆட்டோ, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.445.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.4,999.10 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,794.28 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 281.01 புள்ளிகள் இழப்புடன் 80,262.98-இல் தொடங்கி 79,811.29 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தினஅ போது அதிகபட்சமாக 80,737.55 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 79.27 புள்ளிகள் (0.10 சதவீதம்) கூடுதலுடன் 80,623.26-இல் நிறைடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,191 பங்குகளில் 1,844 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,193 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 154 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டெக்மஹிந்திரா, ஹெச்சிஎல்டெக், எடா்ன்ல், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, டாடாஸ்டீல் உள்பட 17 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம்,அதானிபோா்ட்ஸ், டிரெண்ட், டாடாமோட்டாா்ஸ், ஹிந்துஸ்தான்யுனிலீவா், என்டிபிசி, எம் அண்ட் எம் உள்பட 13 பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 22 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 21.95 புள்ளிகள் (0.09 சதவீதம்) கூடுதலுடன் 24,596.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. பேங்க் நிஃப்டி 110.00 புள்ளிகள் உயா்ந்துது 55,521.15-இல் நிறைவடைந்தது.