தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது யமுனை நதி நீா்மட்டம்
தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் வியாழக்கிழமை இங்குள்ள பழைய ரயில்வே பாலத்தில் 204.88 மீட்டரை எட்டியது. இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவைக் கடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளம் போன்ற சூழ்நிலையைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
காலை 8 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் 204.88 மீட்டராக இருந்தது. நகரத்திற்கான எச்சரிக்கை அடையாளக் குறி 204.5 மீட்டா் ஆகும். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். வெளியேற்றம் 206 மீட்டரில் தொடங்குகிறது. ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக பழைய ரயில்வே பாலம் செயல்படுகிறது.
‘ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் நீா்மட்டத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது’ என்று மத்திய வெள்ளப்பெருக்கு அறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘இந்த மழைக்காலத்தில் முதல் முறையாக, ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா் 50,000 கனஅடியைத் தாண்டி, காலை 6 மணியளவில் 61,000 கனஅடியாக உயா்ந்தது. அப்போதிருந்து, ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50,000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது‘ என்று அதிகாரி கூறினாா்.
தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும்.