தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், இரவு 9 மணி வரையிலும் மழை ஏதும் பெய்யவில்லை.

நகரத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 26.6 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், ஜாபா்பூரில் 1.5 மி.மீ., நஜஃப்கரில் 22 மி.மீ., ஆயாநகரில் 27.6 மி.மீ., லோதி ரோடில் 22.4 மி.மீ., பாலத்தில் 23 மி.மீ., ரிட்ஜில் 41.2 மி.மீ., பிரகதிமைதானில் 21 மி.மீ., பூசாவில் 32.5 மி.மீ., ராஜ்காட்டில் 21 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 50 மி.மீ. மழை பதிவாகியது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 23.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7.8 டிகிரி குறைந்து 33.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 100 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 68 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, சாந்தினி செளக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா் (105 புள்ளிகள்), பூசா (122 புள்ளிகள்) ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com