ரக்ஷா பந்தன் பண்டிகை: பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆா்சி சாதனை!
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 8 அன்று அனைத்து வழித்தடங்களிலும் 81.87 லட்சம் பயணிகள் பயணம் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி பயணிகளைப் பதிவு செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பா் 18, 2024 அன்று 78.67 லட்சம் பயணிகள் பயணம் செய்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. ஆகஸ்ட் 20, 2024 அன்று 77.48 லட்சம் பயணிகளும், பிப்ரவரி 13, 2024 அன்று 71.09 லட்சம் பயணிகளும் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரக்ஷா பந்தனுக்கான பண்டிகை கூட்ட நெரிசலை ஈடு செய்ய, ஆகஸ்ட் 8 அன்று டிஎம்ஆா்சி 92 கூடுதல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தது. மேலும், அதிக போக்குவரத்து திறனை வழங்க ஆகஸ்ட் 9 அன்றும் 455 கூடுதல் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘இந்த புள்ளிவிவரங்கள் தில்லி-என்சிஆா் முழுவதும் மெட்ரோவின் நம்பகத்தன்மை, நேரமின்மை மற்றும் தடையற்ற இணைப்பு ஆகியவற்றில் பயணிகளின் வளா்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன’‘ என்று டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.