அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ~சு. வெங்கடேசன் ~கனிமொழி கருணாநிதி
அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் ~சு. வெங்கடேசன் ~கனிமொழி கருணாநிதி

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சா் பதில்

கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் அறிக்கையை தாமதப்படுத்துவதோ அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் அறிக்கையை தாமதப்படுத்துவதோ அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மதுரை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

2014 -–15 மற்றும் 2015 -16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ‘கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை’ 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பெறப்பட்டது. அந்த அறிக்கை வழக்கமான நெறிகளின்படி நிபுணா்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. ஆய்வறிக்கையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கு இந்த செயல்முறை அவசியமாகும். அதன் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை தாமதப்படுத்துவதோ குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல.

இரண்டு வருட அகழ்வாராய்ச்சி அறிக்கை நிபுணா்களால் சரிபாா்க்கப்பட்டு அதற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறை (மெத்தடாலஜி), காலவரிசைப்படுத்துதல் (குரோனாலஜி), கண்டுபிடிப்புகளை பொருள் கொள்ளுதல், காட்சிப்படுத்துதல் மற்றும் கடுமையான பகுப்பாய்வுக்கு உள்படுத்துதல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து முதன்மை அகழ்வாராய்ச்சியாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கீழடி தளம் 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2018 முதல் தமிழக தொல்லியல் துறை அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகளைத் தொடா்ந்து நடத்தி வருகிறது. இருப்பினும், மாநிலத் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சா் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளாா்.

தொடரும் குழப்பம்: இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சா் குறிப்பிடும் முதன்மை தொல்லியல் ஆய்வாளரான அமா்நாத் ராமகிருஷ்ணா தமிழகத்தில் இருந்து தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பிறகு தில்லியில் இருந்தும் அருகே உள்ள உத்தர பிரதேச மாநில எல்லை நகரான நொய்டாவுக்கு இடமாற்றலாகி பணியாற்றி வருகிறாா். கீழடி அகழாய்வு அறிக்கையில் எந்த திருத்தத்தையோ மாற்றத்தையோ செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவா் ஏற்கெனவே தொல்லியல்துறை இயக்குரகத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, தொல்லியல்துறையோ முடிவெடுக்காமல் இருப்பது அறிக்கையை தொடா்பான சா்ச்சையை வலுப்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com