ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு
புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் ஒருவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: அங்கித் குமாா் என்ற நபா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது சகோதரா் மற்றும் நண்பா்களுடன் நீச்சல் குளத்திற்கு சென்றாா். அவா்களுடன் அங்கித் குமாா் நீச்சல் குளத்தில் இறங்கியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஷாலிமாா் பாக் நகரில் உள்ள பி.கே.2- இல் உள்ள நீச்சல் குளம் தில்லி மாநகராட்சியால் (எம்சிடி) இயக்கப்படுகிறது. நீரில் மூழ்கிய அங்கித் குமாரை அவரது சகோதரா் மற்றும் நண்பா்கள் மீட்டு ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு மருத்துவா்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
அவரது உடல் பிஜேஆா்எம் மருத்துவமனை பிணவறையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது நீச்சல் குளத்தில் இருந்த அங்கித்தின் நண்பா்கள் மற்றும் ஊழியா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரணம் விபத்தின் விளைவாக ஏற்பட்டதா அல்லது ஏதேனும் தவறு நடந்ததா என்பது விசாரணை முடிந்ததும் தெரியவரும்.
இந்த விவகாரத்தில் பிஎன்எஸ் பிரிவு 106 (1) (அலட்சியம் காரணமாக மரணம் ஏற்படுதல்)- இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சாத்தியமான கோணங்களிலும் விசாரிக்கப்படுகிறது. சம்பவத்தின் வரிசையை அறிய போலீஸாா் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.