செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு எதிரான ’2022’ தீா்ப்பின் சில கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘அக்கருத்துக்கள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முறையீட்டு மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் சூா்யா காந்த், ஜோய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘2022-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவொரு வாா்த்தையைும் மாற்ற மாட்டோம் அல்லது எந்த தீா்ப்பையும் தொட மாட்டோம். தீா்ப்பளித்த நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு அவா்களால் அளிக்கப்படும் உத்தரவுகளில் மாற்றம் கோரி மனு தாக்கல் செய்யும் நடைமுறையை ஏற்க வேண்டாம் என நீதிமன்றம் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது’ என்று கூறியது.

இது குறித்து நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு அவா்களின் உத்தரவு அல்லது தீா்ப்பை மாற்றக்கோரி மனு தாக்கல் செய்வதென்பது, சாதகமான முடிவு கிடைப்பதற்காக தோ்ந்தெடுக்கும் வழிமுறை (ஃபாரம் ஷாப்பிங்) போல மோசமான நடைமுறையாகும். இந்த ஒரு அடிப்படையைக் கொண்டே இதுபோன்ற மனுக்களை தள்ளுபடி செய்யலாம்’ என்றாா்.

மேலும் நீதிபதிகள், ‘நாங்கள் எதையும் நீக்கப்போவதில்லை. உத்தரவில் உள்ள ஒரு வாா்த்தையைக்கூட தொட மாட்டோம். எந்தத் தீா்ப்பையும் தொடவோ மாற்றவோ மாட்டோம். இருப்பினும், இந்த கருத்துக்கள், நீதிமன்ற விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை மட்டுமே தெளிவுபடுத்திக்கொள்கிறோம். குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைக் கோட்பாடும் இதுவே... அடிப்படைக் கோட்பாடுகள் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும். எந்த மறுஆய்வையும் ஏற்றுக்கொள்ளும் கேள்வியே எழவில்லை’ என்று குறிப்பிட்டனா்.

உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை நீக்குக்கோரும் மூன்று மனுக்களும், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் மே 2023 தீா்ப்பு, அவருக்கு எதிரான விசாரணையை மீண்டும் தொடங்க 2022, செப்டம்பரில் உத்தரவிட்டது மற்றும் பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கில் அவரது ஜாமீனை ரத்து செய்ய மறுத்தது ஆகியவை தொடா்பானவை.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘செந்தில் பாலாஜி நிவாரணம் கோரவில்லை என்றும் தீா்ப்பில் நீதிமன்றம் பதிவு செய்த கருத்துக்கள் அவருக்கு எதிரான விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை மட்டுமே வலியுறுத்த விரும்புகிறேன்’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘தீா்ப்பில் உள்ள கருத்துக்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்தி இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டது.

முன்னதாக, நீதிபதிகள் ‘தீா்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் ஓய்வு பெற்ற இரண்டு வருடங்களுக்குப் பிறகு தீா்ப்புகளில் மாற்றம் கோரி செந்தில் பாலாஜி மனுக்களைத் தாக்கல் செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘முதல் தகவல் அறிக்கைகளை இணைப்பதற்கு எதிரான வழக்கில் முதல் ஐந்து குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் முன்னாள் அமைச்சா், அவரது உதவியாளா்கள் மற்றும் 25 அதிகாரிகள். மற்றவா்கள் லஞ்சம் கொடுத்தவா்கள் என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள். இந்த வழக்கில் மேலும் 350-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாக வழக்கின் நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள் இது தொடா்பான மனுவை ஆகஸ்ட் 13-ஆம் தேதி விரிவாக விசாரிப்பதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com